ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் போட்டிகளை கொழும்பில் நடத்த திட்டமா?

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் போட்டிகளை கொழும்பில் நடத்த திட்டமா?

லாகூர்:ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடைசியாக துபாயில் கடந்த ஆண்டு நடந்த 15வது ஆசிய கோப்பை தொடரில் பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை பட்டம் வென்றது. இந்நிலையில் 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் ஒருநாள் போட்டி தொடராக நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என திட்டவட்டமாக பிசிசிஐ அறிவித்துவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிசிபி இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளது. இப்போது பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. தொடர் திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் போட்டிகள் ஓமன், இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட உள்ளன. இங்கிலாந்தும் இந்த திட்டத்தில் உள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்ப நிலை 40 டிகிரி பாரன்ஹிட்டாக இருக்கும். இதனால் கொழும்பில் இந்தியாவின் போட்டிகளை நடத்த வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்தின் லண்டன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்தினால் வருவாயை அள்ளலாம் என்பதால் அந்த திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. அடுத்த சில மாதங்களில் போட்டி அட்டவணை வெளியாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் போட்டி உள்பட 5 போட்டிகளும் பொதுவான இடத்தில் நடத்தப்பட உள்ளது. இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றாலும், பொதுவான இடத்தில்தான் அந்த போட்டி நடத்தபபட உள்ளது. இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 13 ஆட்டங்கள் 13 நாட்களில் நடைபெறும். லீக் சுற்றில் 6 அணிகள் இரு பிரிவுகளாக மோதும். இதில் 2 பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 4, பைனல் என இந்தியா, பாகிஸ்தான் 3முறை மோத வாய்ப்பு உள்ளது.

மூலக்கதை