சூர்யகுமார் யாதவ்க்கு மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்: இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து

தினகரன்  தினகரன்
சூர்யகுமார் யாதவ்க்கு மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்: இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து

மும்பை: சூர்யகுமார் யாதவ்க்கு மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் 360° என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் சமீப காலமாக ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இந்த 2 விதமான் போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ்-ன் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். அந்த போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்து நடைபெற்ற 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ்க்கு அணியில் இடம் கிக்கவில்லை. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி களம் கண்டது. முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்கு பதில் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். மும்பை மைதானத்தில் ஆடி பழக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் டி20 போட்டியை போல கலக்குவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தனர். முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். இந்த போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே அவுட் ஆகி ரசிகர்களை சற்று வெறுப்பேற்றினார். ஆஸ்திரேலியாவுடான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நம் சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கோலி அரைசதம் விளாசினார். இந்த போட்டியிலாவது சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த போட்டியிலும் முதல் பந்திலேயே அவுட் ஆகி ரசிகர்களின் உச்சகட்ட கோபத்திற்கு ஆளாக்கினார். 3 போட்டிகளிலும் தொடர்ந்து முதல் பந்திலே அவுட் ஆகிய முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் சூர்யகுமார் யாதவ். இந்நிலையியல் சூர்யகுமார் யாதவ்க்கு மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் சூர்யகுமார் யாதவ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நன்றாக விளையாடிய வீரருக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் எனவும் சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடுவது சரியானதல்ல எனவும் கூறினார்.

மூலக்கதை