எலிமினேட்டரில் இன்று மும்பை - வாரியர்ஸ் மோதல்: பைனல் வாய்ப்பு யாருக்கு

தினகரன்  தினகரன்
எலிமினேட்டரில் இன்று மும்பை  வாரியர்ஸ் மோதல்: பைனல் வாய்ப்பு யாருக்கு

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரின் ‘எலிமினேட்டர்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும். மும்பையில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் டபுள்யு.பி.எல் தொடரின் முதலாவது சீசனில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ஆர்சிபி, யுபி வாரியர்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறை மோதியதில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது.டெல்லி, மும்பை அணிகள் தலா 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் முந்திய டெல்லி அணி பைனல் வாய்ப்பை உறுதி செய்தது. தலா 4 புள்ளிகள் பெற்று முறையே 4வது மற்றும் 5வது இடங்களைப் பிடித்த ஆர்சிபி, குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின. 8 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த யுபி வாரியர்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதும் எலிமினேட்டர் ஆட்டம் இன்று இரவு 7.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி, நாளை மறுநாள் நடக்கும் பைனலில் டெல்லியுடன் பலப்பரீட்சை நடத்தும். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், லீக் சுற்றில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்து அசத்தினாலும் 6வது, 7வது லீக் ஆட்டங்களில் தோற்றது அந்த அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்தது. எனினும், எலிமினேட்டரில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறு முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் வரிந்துகட்டுகிறது.கேப்டன் ஹர்மன்பிரீத், யஸ்டிகா பாட்டியா, அமெலியா கெர், ஸைவர் பிரன்ட், பூஜா வஸ்த்ராகர், இஸ்ஸி வோங், சைகா இஷாக் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் மும்பை அணிக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும். அதே சமயம், அலிஸ்ஸா ஹீலி தலைமையிலான யு.பி.வாரியர்ஸ் அணியும் பைனலுக்கு முன்னேறுவதில் உறுதியுடன் உள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான சவால் காத்திருக்கிறது. லீக் சுற்றில் இந்த அணிகள் மோதிய 2 ஆட்டங்களில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், வாரியர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றியை வசப்படுத்தி 1-1 என சமபலத்துடன் உள்ளன. வாரியர்ஸ் வீராங்கனைகள் அலிஸ்ஸா ஹீலி, தாஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், சோபி எக்லஸ்டோன், தீப்தி ஷர்மா, ராஜேஷ்வரி கெயக்வாட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றர்.இரு அணிகளுமே பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் உள்ளதால் இன்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. மும்பை இந்தியன்ஸ்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), பிரியங்கா பாலா, யஸ்டிகா பாட்டியா, நீலம் பிஷ்ட், ஹீதர் கிரகாம், தாரா குஜ்ஜார், சைகா இஷாக், ஜின்டிமணி கலிதா, அமன்ஜோத் கவுர், ஹுமைரா காஸி, அமெலியா கெர், ஹேலி மேத்யூஸ், நதாலியே ஸைவர் பிரன்ட், க்ளோ டிரையன், பூஜா வஸ்த்ராகர், இஸ்ஸி வாங், சோனம் யாதவ். யுபி வாரியர்ஸ்: அலிஸ்ஸா ஹீலி (கேப்டன்), அஞ்சலி சர்வனி, லாரென் பெல், பார்ஷவி சோப்ரா, சோபி எக்லஸ்டோன், ராஜேஸ்வரி கெயக்வாட், கிரேஸ் ஹாரிஸ், ஷப்னிம் இஸ்மாயில், தாஹ்லியா மெக்ராத், கிரண் நவ்கிரே, ஷ்வேதா ஷெராவத், தீப்தி ஷர்மா, ஷிவாலி ஷிண்டே, சிம்ரன் ஷேக், தேவிகா வைத்யா, சொப்பதண்டி யாஷ.

மூலக்கதை