பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன்

தினமலர்  தினமலர்
பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன்

தமிழில் பேட்ட மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். ஆனால் தமிழில் தனுஷுடன் நடித்த மாறன் படத்தை தொடர்ந்து தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்கிற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதேசமயம் சமீபத்தில் பிரபாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் மாளவிகா மோகன். இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள உஸ்தாத் பகத்சிங் என்கிற படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என தெலுங்கு மீடியாக்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.


இது மாளவிகா மோகனனின் கவனத்திற்கும் சென்றது. இதைத்தொடர்ந்து, “பவன் கல்யாணுடன் நடிப்பதற்கு நான் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையானது அல்ல.. நான் இந்த படத்தில் நடிக்கவில்லை.. ஆனால் அதைவிட மிகப்பெரிய படம் ஒன்றின் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளேன். அதிலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அல்ல.. மெயின் கதாநாயகியாகவே நடிக்கிறேன்” என்பதை அழுத்தமாக குறிப்பிட்டு தனது சோசியல் மீடியா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் மாளவிகா மோகனன்.

மூலக்கதை