2வது டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் தோல்வி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

வெலிங்டன்: இலங்கை அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 58 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச, நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (123 ஓவர்). கான்வே 78, கேன் வில்லியம்சன் 215, ஹென்றி நிகோல்ஸ் 200* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்சில் 164 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. 416 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய இலங்கை, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்திருந்தது.குசால் மெண்டிஸ் 50 ரன், மேத்யூஸ் 1 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். குசால் மேற்கொண்டு ரன் எடுக்காமல் வெளியேற, மேத்யூஸ் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இலங்கை 116 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், சண்டிமால் - தனஞ்ஜெயா ஜோடி உறுதியுடன் போராடியது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்தனர். சண்டிமால் 62 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து தனஞ்ஜெயா - நிஷான் மதுஷ்கா இணைந்து 76 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். மதுஷ்கா 39 ரன், தனஞ்ஜெயா 98 ரன் (185 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. பிரபாத் 2, லாகிரு குமாரா 7, கசுன் ரஜிதா 20 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இலங்கை 2வது இன்னிங்சில் 358 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இன்னிங்ஸ் மற்றும் 58 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. ஹென்றி நிகோல்ஸ் ஆட்ட நாயகன் விருதும், வில்லியம்சன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
மூலக்கதை
