பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேச்சு ராகுல் காந்தியிடம் போலீஸ் விசாரணை: லண்டன் விவகாரத்திற்கு மத்தியில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேச்சு ராகுல் காந்தியிடம் போலீஸ் விசாரணை: லண்டன் விவகாரத்திற்கு மத்தியில் பரபரப்பு

புதுடெல்லி: பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் டெல்லி காவல்துறை விசாரணை நடத்தியது. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்து தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி காவல்துறை சார்பில் ராகுல்காந்திக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், ‘பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும், இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்’ என்று டெல்லி காவல்துறை ராகுல் காந்திக்கு நோட்டீஸில் தெரிவித்திருந்தது. ஏற்கனவே லண்டனில் ராகுல் காந்தி பேசிய பேச்சு தொடர்பாக அவர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லி காவல்துறை அனுப்பிய நோட்டீசின் காலக்கெடு இன்றுடன் முடிந்ததால், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை கோரி டெல்லி காவல் துறையின் சிறப்பு சிபி (சட்டம்-ஒழுங்கு) சாகர் ப்ரீத் ஹூடா தலைமையிலான போலீசார், ராகுல் காந்தியின் இல்லத்திற்கு இன்று காலை 11 மணியளவில் சென்றனர். அவர்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் குறித்து ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக இதுகுறித்து சாகர் ப்ரீத் ஹூடா கூறுகையில், ‘ராகுல்காந்தியிடம் விசாரணை மற்றும் சில தகவல்களை கோர வந்துள்ளோம். கடந்த ஜனவரி 30ம் தேதி, ஸ்ரீநகரில் ராகுல் காந்தி பேசும்போது அவர் பல பெண்களை சந்தித்ததாகவும், அவர்கள் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரிடம் கூறியதாக பேசியுள்ளார். எனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த விபரங்களை சேகரிக்க ராகுல்காந்தியிடம் விசாரிக்க உள்ளோம்’ என்றார். லண்டனில் ராகுல்காந்தி பேசிய விவகாரத்திற்கு மத்தியில், ஸ்ரீநகரில் பேசிய பேச்சு குறித்து அவரிடம் போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை