இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி: விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி: விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்

விசாகப்பட்டினம்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரின் போட்டியில் நீடிக்க ஆஸ்திரேலிய அணியும் இன்று களமிறங்க உள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக மார்ஷ் 81 ரன்கள் எடுத்தார்.189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இஷான் கிஷான், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். கில் 20 ரன்கள் எடுத்து வெளியேற ராகுல், ஜடேஜா ஜோடி பொறுப்பாக விளையாடி அணியை வெற்றியடைய செய்தனர். ராகுல் 75 ரன்களும், ஜடேஜா 45 ரன்களும் எடுத்தனர்.இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரின் போட்டியில் நீடிக்க ஆஸ்திரேலிய அணியும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.விசாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் ஆட்டம் மழையால் பாதிக்கக்கூடும் என தெரிகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் போட்டியில் வென்ற நிலையில் கேப்டன் ரோகித் ஷர்மா அணிக்கு திரும்பியுள்ளார்.

மூலக்கதை