விக்ரம் படத்திற்கு வரி கேட்ட வழக்கு தள்ளுபடி

தினமலர்  தினமலர்
விக்ரம் படத்திற்கு வரி கேட்ட வழக்கு தள்ளுபடி

8 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த படம் ஐ. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இந்த படத்தை புதுச்சேரி மாநிலத்தில் விநியோகம் செய்ய ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் என்ற நிறுவனம் உரிமம் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் புதுச்சேரி அரசிடம் வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தது. இதற்கு அரசு மறுத்துவிட்டது.

இதை தொடர்ந்து விநியோக நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் “திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக அரசு வரிவிலக்கு அளிக்கிறது. ஆனாலும் கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பதுதான் சட்டம். அதைத்தான் நீதிமன்றம் கருத்தில் கொள்ளும், தமிழில் பெயர் வைத்ததற்காகவே வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. படம் வெளியாகி 8 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு வழக்கும், தள்ளுபடியும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை