ஜனநாயக வெற்றியால் பாதிக்கப்பட்டவர்கள் நமது நாட்டை மோசமாக காட்ட முயற்சிக்கிறார்கள் : ராகுல் மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு

புதுடெல்லி: இந்தியாவின் ஜனநாயகம். அதன் அமைப்புகளின் வெற்றி சிலரைத் துன்புறுத்துகிறது. அதனால்தான் அவர்கள் நமது நாட்டை மோசமாக காட்ட முயற்சி செய்கிறார்கள் என்று ராகுல்காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனம் செய்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது; நாடு முழுவதும் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்து, உலக அறிவுஜீவிகள் இந்தியாவைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கும்போது, அவநம்பிக்கையைப் பேசுவது, நாட்டை மோசமான நிலையில் காட்டுவது, நாட்டின் மன உறுதியைக் குலைப்பது போன்றவையும் நடைபெறுகின்றன. இந்தியா மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தாலும், நாடு தனது இலக்குகளை அடையும் வகையில் தொடர்ந்து முன்னேறும். எதிர்க்கட்சிகளை குறிவைத்து, மோசடிகள் முன்பு தலைப்புச் செய்திகளாக இருந்தன. ஆனால் இப்போது ஊழல் செய்தவகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது செய்தியாகி வருகிறது. இது இந்தியாவின் தருணம் என்று உலகம் கூறுகிறது. இந்தியாவில் இதுவரை இருந்த அனைத்து அரசுகளும் தங்கள் திறமைக்கு ஏற்ப செயல்பட்டு முடிவுகளைப் பெற்றது. ஆனால் எனது அரசு புதிய முடிவுகளை எடுக்க விரும்புகிறது. வேறுபட்ட வேகத்தில் செயல்படுகிறது. இன்று இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது. உலகின் முன்னணி பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் இது இந்தியாவிற்கான காலம் என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மூலக்கதை
