காலிறுதியில் ரைபாகினா: மெத்வதேவ் முன்னேற்றம்

தினகரன்  தினகரன்
காலிறுதியில் ரைபாகினா: மெத்வதேவ் முன்னேற்றம்

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். 4வது சுற்றில் ரஷ்யாவின் வர்வரா கிரசேவாவுடன் (22 வயது, 66வது ரேங்க்) மோதிய ரைபாகினா (23 வயது, 10வது ரேங்க்) 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ரைபாகினா ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கஜகஸ்தான் குடியுரிமை பெற்று விளையாடி வருகிறார். நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (21 வயது, போலந்து) தனது 4வது சுற்றில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் எம்மா ரடுகானுவை (20 வயது, 77வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்துக்கு நீடித்தது. 5ம் நிலை வீராங்கனை கரோலின் கார்சியா (29 வயது, பிரான்ஸ்) 4வது சுற்றில் ருமேனியாவின் சொரானா கிறிஸ்தேயாவிடம் (32 வயது, 83வது ரேங்க்) 2 மணி, 23 நிமிடம் போராடி 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். முன்னணி வீராங்கனைகள் பெத்ரா குவித்தோவா, கரோலினா முச்சோவா (செக்.), கோகோ காஃப் (அமெரிக்கா), மரியா சாக்கரி (கிரீஸ்), அரினா சபலெங்கா (பெலாரஸ்) ஆகியோரும் காலுறுதிக்கு முன்னேறி உள்ளனர். இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்), டேனில் மெத்வதேவ் (ரஷ்யா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), கேமரான் நோர்ரி (இங்கிலாந்து), பெலிக்ஸ் ஆகர் அலியஸிமி (கனடா), யானிக் சின்னர் (இத்தாலி), பிரான்சிஸ் டியபோ (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.  மெத்வதேவ் தனது 4வது சுற்றில் 6-7 (5-7), 7-6 (7-5), 7-5 என்ற செட் கணக்கில் ஜெர்மனி நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வெரவை வீழ்த்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 17 நிமிடத்துக்கு நீடித்தது.

மூலக்கதை