இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார் காமெடி நடிகர் போண்டாமணி. சிறுநீரக அறுவை சிகிச்சையை ஆறு மாதங்களுக்குள் செய்து கொள்ள வேண்டும் என டாக்டர்கள் எச்சரித்த நிலையிலும் சிகிச்சைக்கான செலவை ஈடுகட்ட உடல்நலக்குறைவான நிலையிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதுடன், ஏற்கனவே ஒப்பந்தம் செய்த பத்துக்கும் மேற்பட்ட சினிமாக்களை முடித்து கொடுக்கும் மும்மரத்திலும் ஈடுபட்டிருந்த போண்டாமணியுடன் பேசினோம்.

நினைத்து கூட பார்க்கவில்லை எனக்கு இப்படி ஒரு நோய் வரும் என. அறுவை சிகிச்சை முடியும் வரை கொஞ்சம் கஷ்டம் தான். சினிமாவை தவிர வேறு வருமானம் கிடையாது. அறுவை சிகிச்சைக்கு ரூ. ஐந்து முதல் ஆறு லட்சம் வரை தேவைப்படும். பெயர் சொல்ல விரும்பாத பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் தங்களால் முடிந்தளவு உதவுவதாக தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்திலிருந்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுள்ளது.

நன்றாக இருந்த காலத்தில் நடிக்க வேண்டிய சினிமாக்கள் பல இருந்தன. மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஒன்றிரண்டு மாதங்களில் சுஜி என்ற நான், கிராம பூக்கள், ஸ்ரீ ஐயப்பன் உள்ளிட்ட பத்து சினிமாக்களில் நடித்து கொடுத்துள்ளேன். சின்னத்திரையில் மாதம் நான்கு நாட்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறேன்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நல்லா இருந்த காலத்தில் சினிமாக்களில் நடிக்க ஓடிக்கொண்டே இருந்ததால் உடம்பை கவனிக்காமல் விட்டு விட்டேன். உடலையும் இனி நான் மட்டுமின்றி நீங்களும் (வாசகர்கள்) கவனித்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்தில் இலங்கை மியூசியத்தில் என் படத்தை வைத்துள்ளதாக தகவல் வெளியானது உற்சாகத்தை தந்திருக்கிறது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., படம் அந்த மியூசியத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்து என் படம் இடம் பெற்றுள்ளதாக மற்றவர்கள் தெரிவித்த போது சந்தோஷமாக இருக்கிறது. இதுவரை 260 சினிமாக்கள், 52 சீரியல்கள் நடித்து விட்டேன். இருக்கும் வரை மக்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை என்றார்.
இவரை வாழ்த்த 94450 77729

மூலக்கதை