குடிபோதையில் மனைவியை தாக்கிய வினோத் காம்ப்ளி மீது வழக்கு

தினகரன்  தினகரன்
குடிபோதையில் மனைவியை தாக்கிய வினோத் காம்ப்ளி மீது வழக்கு

மும்பை: குடிபோதையில் மனைவியை தாக்கி காயப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது பாந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி, ஆன்டிரியா ஹேவிட் என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உண்டு. இவர்களுடைய வீடு மும்பை பாந்த்ரா மேற்கில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் இடையே வினோத் காம்ப்ளி குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது மனைவியை அவர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர்களது 12 வயது மகன் காம்ப்ளியை தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் கோபத்துடன் சமையலறைக்கு சென்ற காம்ப்ளி, சமையல் பாத்திரம் ஒன்றின் கைப்பிடியை எடுத்து வந்து மனைவி மீது வீசியுள்ளார். அது மனைவியின் தலையில் பட்டு காயம் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கணவன் மீது பாந்த்ரா போலீசில் ஆன்டிரியா புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வினோத் காம்ப்ளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை