அதானி விஷயத்தில் மோடி மவுனம் ஏன்?..காங்கிரஸ் சரமாரி கேள்வி

தினகரன்  தினகரன்
அதானி விஷயத்தில் மோடி மவுனம் ஏன்?..காங்கிரஸ் சரமாரி கேள்வி

புதுடெல்லி: அதானி குழுமம் மீதான முறைகேடுகள் தொடர்பாக நேர்மையான,நியாயமான முறையில் விசாரணை நடைபெறுமா என்று காங்கிரஸ் சந்தேகம் எழுப்பி உள்ளது. அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி ஆய்வறிக்கை வெளியிட்டது.  இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. ,இந்த விவகாரத்தில் அதானி குழும பங்குகளின் விலை கடுமையாக சரிந்துள்ளன. அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி மற்றும் ரிசர்வ் வங்கி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில்,காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், அதானி குழுமம் மீதான புகார்கள் வந்த நிலையில்,மோடியின் பாஜ அரசு தொடர் மவுனம் காத்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கும் அதானி குழுமத்துக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. கடந்த 2016ல் பனாமா ஆவணங்கள் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வெளி நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்படும் நிதி குறித்து விசாரணை நடத்துவதற்கு பிரதமர் மோடி  உத்தரவிட்டுள்ளார் என நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.  அதானி எங்களுக்கு யார் என்று கேட்டு நீங்கள் தப்பிவிட முடியாது. ஏனென்றால்,  பனாமா ஆவணங்கள் விவகாரத்தில் தொழிலதிபர் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியும் சம்பந்தப்பட்டுள்ளார். வினோத் அதானி  வரிபுகலிடங்களான பஹாமாஸ் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் இருந்துகொண்டு செயல்படுகிறார். மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமலாக்க துறை, சிபிஐ, வருவாய் புலனாய்வு துறை போன்ற ஒன்றிய ஏஜென்சிகளின் மூலம் தங்களுக்கு எதிரானவர்களை அரசு மிரட்டி வருகிறது. அதானி குழுமம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை  என்ன? தற்போது உள்ள பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உள்ள அரசில் நியாயமான,நேர்மையான முறையில் விசாரணை நடைபெறுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை