ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடர் பீல்டிங்கில் கூடுதல் கவனம்: பயிற்சியாளர் டிராவிட் உற்சாகம்

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடர் பீல்டிங்கில் கூடுதல் கவனம்: பயிற்சியாளர் டிராவிட் உற்சாகம்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி செய்து வருவதாக, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப். 9ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாக்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை பயிற்சியாளர் டிராவிட் கூறியதாவது: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறோம். அனைத்து வீரர்களுமே நல்ல உடல்தகுதியுடன் உள்ளனர். கடந்த சில மாதங்களாக டி20, ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடி வந்த நிலையில், டெஸ்ட் அணியை மீண்டும் ஒன்றாகப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் சவாலுக்கு தயாராவது எப்போதுமே சற்று சிரமம் தான். அதற்காக வீரர்கள் வலைப்பயிற்சியில் கடுமையாக உழைப்பதும் கூடுதல் நேரம் செலவழிப்பதும் திருப்தியாக உள்ளது.பயிற்சி ஆடுகளங்களும் நன்றாக அமைந்துள்ளன. பீல்டிங்கில் இப்போது மிகுந்த கவனம் செலுத்தி பயிற்சி அளித்து வருகிறோம். குறிப்பாக, பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் நின்று பந்தை பிடிப்பதிலும், ஸ்லிப் திசையில் நிற்கும் வீரர்கள் கேட்ச் செய்வதிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தற்போது டி20, ஒருநாள் போட்டிகளில் அதிகமாக விளையாட வேண்டிய சூழல் இருப்பதால், டெஸ்ட் போட்டிக்கு தயாராவதில் இது மிக மிக அவசியமான அம்சமாக இருக்கிறது. இதற்கு போதிய நேரமும் வாய்ப்பும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. குறுகிய கால பயிற்சி முகாம் என்றாலும், நாக்பூரில் 5 அல்லது 6 நாட்கள் ஒன்று சேர்ந்து பயிற்சி பெறுவது வீரர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. ஆஸி. டெஸ்ட் தொடரை நாங்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு டிராவிட் கூறினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1996-1997ல் முதல் முறையாக பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நடந்த நிலையில்... கடைசியாக 2017, 2018-19, 2020-21ல் நடந்த 3 தொடர்களிலும் இந்தியா கோப்பையை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை