கார்கில் போருக்கு முக்கிய காரணமான பாக். முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்

தினகரன்  தினகரன்
கார்கில் போருக்கு முக்கிய காரணமான பாக். முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்

துபாய்: அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு துபாயில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார். அவருக்கு வயது 79. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப். கடந்த 1998ம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக  நவாஸ் ஷெரீப்  இருந்தபோது ராணுவ தலைமை தளபதியாக இருந்தவர். இந்தியாவுடனான கார்கில் போருக்கு காரணம் முஷாரப்தான். கார்கில் போரில் பாகிஸ்தான்  தோற்றதால் நவாஸ்சுக்கும் -  முஷாரப்புக்கும் மோதல் வலுத்தன. முஷாரப் ராணுவ புரட்சியை தூண்டி பிரதமராக இருந்த ஷெரீப்பை சிறையில் தள்ளிவிட்டு, தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்துக்கொண்டார்.  பாகிஸ்தானில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கினார். நீதிபதிகளையும் அவர் சிறையில் அடைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கிட்டத்தட்ட சர்வாதிகாரியை போல் ஆட்சியை நடத்தினார். உச்சதிமன்ற நீதிபதியைப் பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. 2007ம் ஆண்டு ஜூலையில்  இவரது கட்டளைப்படி இஸ்லாமாபாத்தின் லால் மஸ்ஜித்தை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய ராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கொய்தா ஆதரவுத் தீவிரவாதிகளை சுட்டு கொன்றது. பின்னர் 2008ல் ஆகஸ்ட் 18ம் தேதி பதவி விலகினார்.  அவர் மீதான வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது 2016ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சைக்கு செல்வதாக சொல்லிவிட்டு  பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாய் சென்றுவிட்டார். பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக 2016ல் துபாய் சென்ற முஷாரப் அதன்பின் நாடு திரும்பவில்லை. கார்கில் போருக்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.  நீண்ட காலமாக அமிலாய்டோசிஸ்  என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு வந்த அவர் துபாயில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி  நேற்று காலமானார். அவருக்கு வயது 79. அவரது மறைவுக்கு  பிரதமர் ஷெபாஸ்  ஷெரீப், இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவர் பாவத் சவுத்ரி உள்ளிட்ட பலர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை