உத்தர பிரதேச போலீஸ் உதவியுடன் தற்கொலைக்கு முயன்ற 2 பேரின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்டாகிராம்

தினகரன்  தினகரன்
உத்தர பிரதேச போலீஸ் உதவியுடன் தற்கொலைக்கு முயன்ற 2 பேரின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்டாகிராம்

லக்னோ: தற்கொலை முயற்சி குறித்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்த தகவலையடுத்து 2 பேரின் உயிரை உ.பி. போலீசார் காப்பாற்றியுள்ளனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய இணையதளங்களை மெட்டா நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்துடன் உ.பி. போலீசார் கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஒன்று செய்தனர். இதன்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இணையதளங்களில் உ.பியை சேர்ந்த யாராவது தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக  பதிவிட்டால் உடனடியாக மாநில போலீசின் சமூக வலைதள பிரிவுக்கு மெட்டா நிறுவனம் தகவல் அளிக்க வேண்டும். இதன்படி   கடந்த ஜனவரி 31ம் தேதி காஜியாபாத்தை சேர்ந்த ஒருவர் தனது தற்கொலை முயற்சியை இன்ஸ்ட்ராகிராம் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பினார். இதுபற்றிய தகவலை மெட்டா நிறுவனம் உ.பி போலீசுக்கு உடனடியாக தெரிவித்தது.அடுத்த 13வது நிமிடத்தில் போலீசார் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்றனர். மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றவரை போலீசார் காப்பாற்றினர். தொழிலில் ஏற்பட்ட ரூ.90 ஆயிரம் நஷ்டத்தால் அவர் தற்கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதே போல் கடந்த 3ம் தேதி நள்ளிரவு அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்ய தான் வாங்கி வைத்துள்ள மாத்திரைகளை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இது பற்றி மெட்டா நிறுவனம் உடனடியாக தகவல் தர 15 நிமிடத்தில் விரைந்து சென்று அந்த பெண்ணை போலீசார் காப்பாற்றினர். மெட்டா நிறுவனம் தந்த தகவலால் இதுவரை 10 பேரை தற்கொலையில் இருந்து காப்பாற்றியதாக உ.பி போலீசார் தெரிவித்தனர்.  

மூலக்கதை