குண்டுவெடிக்கும் பாகிஸ்தானில் எப்படி போட்டி நடத்த முடியும்?... பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கேள்வி

தினகரன்  தினகரன்
குண்டுவெடிக்கும் பாகிஸ்தானில் எப்படி போட்டி நடத்த முடியும்?... பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கேள்வி

பக்ரைன்: ஆசியக் கோப் பை தொடரில் பங்கேற்கும் நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரிய தலைவர்கள் அல்லது செயலாளர்கள் ஒவ்வொரு வருடமும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தலைவராக தேர்வாவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைவராக தேர்வானார்.இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த ஜெய்ஷா, ``இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது’’ என அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், நாங்கள் ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்க இந்தியா செல்லமாட்டோம்’’ என்றார்.அப்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆசியக் கோப்பை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஜெய்ஷா கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது போட்டி நடைபெறும் நாடு என பாகிஸ்தானை குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஜெய்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஜெய் ஷா, ‘‘சமீபத்தில் பெசாவார் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததை நாம் அறிவோம். அங்கு இன்னமும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அப்படி இருக்கும்போது, எப்படி அங்கு போட்டிகளை நடத்த முடியும். எந்த நம்பிக்கையில் வீரர்கள் அங்கு செல்வார்கள்’’ என அதிரடியாக பேசியிருக்கிறார்.  இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு மாற்றாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்லது இலங்கையில் போட்டியை நடத்தலாம் எனவும் ஜெய் ஷா பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார். இதுகுறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று இறுதி முடிவு எடுக்க உள்ளது. அமீரகத்தில்தான் போட்டி நடைபெற அதிகம் வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகி வருகிறது.

மூலக்கதை