ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா

தினகரன்  தினகரன்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா

பெங்களூரு: உத்தரகாண்ட் அணியுடனான ரஞ்சி கோப்பை காலிறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 281 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற கர்நாடகா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த ஜன.31ம் தேதி தொடங்கிய காலிறுதியில் கர்நாடகா - உத்தரகாண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீச, உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் வெறும் 116 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. குணால் சண்டேலா 31, அவ்னீஷ் 17, தாரே, ராவத் தலா 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். கர்நாடகா பந்துவீச்சில் எம்.வெங்கடேஷ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா 606 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது (162.5 ஓவர்). சமர்த் 82, கேப்டன் மயாங்க் 83, படிக்கல் 69, நிகின் ஜோஸ் 62 ரன் எடுக்க, அபாரமாக விளையாடிய ஷ்ரேயாஸ் கோபால் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 161 ரன் (288 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். மணிஷ் பாண்டே, கிருஷ்ணப்ப கவுதம் தலா 39 ரன், பி.ஆர்.ஷரத் 33 ரன் எடுத்தனர். உத்தரகாண்ட் பந்துவீச்சில் அபய் நேகி 4, மயங்க் மிஷ்ரா 3, ஸ்வப்னில் சிங் 2, தீபக் தபோலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 490 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய உத்தரகாண்ட் அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்திருந்தது. திக்‌ஷான்ஷு நேகி 27 ரன், ஸ்வப்னில் சிங் 27 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். திக்‌ஷான்ஷு மேற்கொண்டு 2 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, கடுமையாகப் போராடி அரை சதம் அடித்த ஸ்வப்னில் 51 ரன் எடுத்து (100 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) வைஷாக் பந்துவீச்சில் படிக்கல் வசம் பிடிபட்டார்.ஆதித்யா தாரே 28, அகில் ராவத் 10 ரன் எடுத்து வைஷாக் பந்துவீச்சில் வெளியேறினர். அபய் நேகி (15 ரன்), நிக்கில் கோஹ்லி (0), தீபக் தபோலா (0) ஆகியோர் ஷ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, உத்தரகாண்ட் அணி 2வது இன்னிங்சில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (73.4 ஓவர்). மயங்க் மிஷ்ரா 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கர்நாடகா பந்துவீச்சில் விஜய்குமார் வைஷாக், ஷ்ரேயாஸ் கோபால் தலா 3, வித்வத் கவெரப்பா, எம்.வெங்கடேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். கர்நாடகா அணி இன்னிங்ஸ் மற்றும் 281 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆல் ரவுண்டராக ஜொலித்த ஷ்ரேயாஸ் கோபால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.ஜார்க்கண்ட் ஏமாற்றம்: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பெங்கால் அணிக்கு எதிராக நடந்த காலிறுதியில் உத்தரகாண்ட் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. டாஸ் வென்ற பெங்கால் அனி முதலில் பந்துவீச, ஜார்க்கண்ட் முதல் இன்னிங்சில் 173 ரன்னுக்கு சுருண்டது. குமார் சுராஜ் 89, பங்கஜ் குமார் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பெங்கால் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 4, முகேஷ் குமார் 3, இஷான் போரெல், ஆகாஷ் கட்டக் தலா 1 விக்கெட் எடுத்தனர்.பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 328 ரன் குவித்து ஆல் அவுட்டானது (108 ஓவர்). அபிமன்யு ஈஸ்வரன் 77, சந்திப் குமார் கராமி 68, ஷாபாஸ் அகமது 81, அபிஷேக் போரெல் 33 ரன் எடுத்தனர். இதையடுத்து, 155 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜார்க்கண்ட் 3ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்திருந்தது. 4ம் நாளான நேற்று அந்த அணி 221 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது (63.5 ஓவர்). ஆர்யமான் சென் 64, அனுகுல் ராய் 40, கேப்டன் விராத் சிங் 29 ரன் எடுத்தனர். சுப்ரியோ சக்ரவர்த்தி 41 ரன்னுடன் (83 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்கால் பந்துவீச்சில் ஆகாஷ் கட்டக் 3, ஆகாஷ் தீப், ஷாபாஸ் அகமது தலா 2, முகேஷ் குமார், இஷான் போரெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 67 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்கால் களமிறங்கியது. காஸி சைபி, அபிமன்யு ஈஸ்வரன் இருவரும் துரத்தலை தொடங்கினர். காஸி சைபி 4 ரன்னில் ஆட்டமிழந்தாலும், பெங்கால் 12.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஈஸ்வரன் 28 ரன், கராமி 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆகாஷ் தீப் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மூலக்கதை