3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.! 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஆர்ச்சர்

தினகரன்  தினகரன்
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.! 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஆர்ச்சர்

கிம்பர்லி: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 59 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளிலும் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்க அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லி டயமண்ட் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச... இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்தது. டேவிட் மலான் 118 ரன் (114 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் ஜோஸ் பட்லர் 131 ரன் (127 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்), மொயீன் அலி 41 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். தென் ஆப்ரிக்க தரப்பில் லுங்கி என்ஜிடி 4, மார்கோ ஜான்சென் 2, சிசண்டா மகலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 43.1 ஓவரில் 287 ரன் எடுத்து 59 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் பவுமா 35, ஹெண்ட்ரிக்ஸ் 52, மார்க்ரம் 39, கிளாஸன் 80, பார்னெல் 34 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 6, அடில் ரஷித் 3, கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தாலும், தென் ஆப்ரிக்கா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை இங்கிலாந்து கேப்டன் பட்லர் தட்டிச் சென்றார்.

மூலக்கதை