டி20 தொடரை கைப்பற்ற போவது யார்? அகமதாபாத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
டி20 தொடரை கைப்பற்ற போவது யார்? அகமதாபாத்தில் இன்று இந்தியாநியூசிலாந்து பலப்பரீட்சை

அகமதாபாத்: இந்திய மண்ணில் தற்போது நடந்து வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. எனவே இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறும் 3வது டி20 கிரிக்கெட் போட்டியை வெல்ல இரு அணிகளும் முனைப்புடன் களமிறங்க உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த 3வது டி20 கிரிக்கெட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு துவங்குகிறது. முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. எனவே சொந்த மண்ணில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, இந்த டி20 தொடரையும் கைப்பற்றி விட வேண்டும் என தேவையான வியூகங்களுடன் இன்று மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இதுவரை சர்வதேச அளவில் 9 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணி 5 முறையும், 2வதாக பேட் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆடுகளத்தில் கடந்த 2021ம் ஆண்டு, இங்கிலாந்தை எதிர்த்து ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. டி20 போட்டிகளில் இந்த ஆடுகளத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியிலும் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெற மாட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய சுழற்பந்து வீச்சாளர் யஸ்வேந்திர சாஹல் இப்போட்டியிலும் ஆடும் 11 வீரர்களில் ஒருவராக இறங்க உள்ளார். லக்னோவில் நடந்த 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் ஓபனர் ஃபின் ஆலனை ஆட்டமிழக்க செய்த சாஹல், அப்போட்டியில் 2 ஓவர்களை வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நியூசிலாந்து அணியில், சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான மிக்கேல் பிரேஸ்வெல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்கூசன் ஆகியோர் இந்த ஆடுகளத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கலாம். பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஆடுகளம் உள்ளதால் இந்தப் போட்டியில் டாஸ் முக்கியத்துவம் பெறுகிறது.

மூலக்கதை