பாடகியுடன் நெருக்கம் : மீண்டும் பரபரப்பை கிளப்பிய அர்ஜுன் தாஸ்

தினமலர்  தினமலர்
பாடகியுடன் நெருக்கம் : மீண்டும் பரபரப்பை கிளப்பிய அர்ஜுன் தாஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கென குறிப்பிட்ட அளவில் பின் தொடரும் ரசிகர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரும் நடிகை ஐஸ்வர்ய லட்சுமியும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகைப்படத்தை நடிகை ஐஸ்வர்ய லட்சுமியே வெளியிட்டிருந்ததுடன் அதில் இதயம் குறியீட்டுடன் அவர் வெளியிட்டிருந்தது இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்கிற கேள்வியையும் எழுப்பியது. அந்த படம் இவ்வளவு வைரலாகும் என எதிர்பார்க்காத ஐஸ்வர்ய லட்சுமி தாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் தான் என்றும் ஒரு சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தபோது இந்த புகைப்படத்தை எடுத்தோம் என்றும் இது இவ்வளவு தூரம் பரபரப்பை கிளப்பும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது பின்னணி பாடகி மாளவிகாவின் தோளில் அர்ஜுன் தாஸ் சாய்ந்தபடி இருப்பது போன்று எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புகைப்படத்தை அர்ஜுன் தாசே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மதிய உணவு முடித்ததும் டக்கென எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஆனாலும் மாளவிகாவிற்கு இதில் அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. இன்னும் நிறைய படங்களை ஒன்றாக இணைந்து எடுக்க விரும்புகிறோம்” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து வழக்கம் போலவே நெட்டிசன்கள் இவர்களுக்கு இடையே இருப்பது என்ன என்கிற ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்கள்.

மூலக்கதை