ரஞ்சி கோப்பை காலிறுதி சவுராஷ்டிரா 303 ரன் குவிப்பு: பார்த் பட் அபார சதம்

தினகரன்  தினகரன்
ரஞ்சி கோப்பை காலிறுதி சவுராஷ்டிரா 303 ரன் குவிப்பு: பார்த் பட் அபார சதம்

ராஜ்கோட்: பஞ்சாப் அணியுடனான ரஞ்சி கோப்பை காலிறுதியில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 303 ரன் குவித்து ஆல் அவுட்டானது. எஸ்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி முதலில் பேட் செய்தது. ஆஸி. டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டியிருப்பதால், சவுராஷ்டிரா அணியில் நட்சத்திர வீரர்கள் புஜாரா, ஜடேஜா, உனத்கட் ஆகியோர் இடம் பெறவில்லை. ஹர்விக் தேசாய், ஸ்னெல் படேல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஒரு முனையில் ஸ்னெல் படேல் உறுதியுடன் விளையாட... ஹர்விக் 0, விஷ்வராஜ் 28, ஷெல்டன் 18, கேப்டன் அர்பித் 0, சிராக் ஜனி 8, பிரேரக் 5, தர்மேந்திர ஜடேஜா 12 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஸ்னெல் 70 ரன் (131 பந்து, 11 பவுண்டரி) விளாசி மார்கண்டே பந்துவீச்சில் கிளீன் போல்டாக, சவுராஷ்டிரா 45.1 ஓவரில் 147 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், பார்த் பட் - சேத்தன் சகாரியா ஜோடி 9வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 61 ரன் சேர்த்தது. சகாரியா 49 பந்தில் 22 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த யுவராஜ்சிங் டோடியா கடைசி விக்கெட்டுக்கு கம்பெனி கொடுக்க, அபாரமாக விளையாடிய பார்த் பட் சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 10வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்தது. டோடியா 50 பந்தில் 17 ரன் எடுத்து ஆட்டமிழக்க, சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 303 ரன் குவித்து ஆல் அவுட்டானது (87 ஓவர்). பார்த் பட் 111 ரன்னுடன் (155 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் மார்கண்டே 4, பல்தேஜ் 3, சித்தார்த் கவுல் 2, நமன் திர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப், முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்துள்ளது. சுருண்டது ஜார்க்கண்ட்: பெங்கால் அணியுடன் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று தொடங்கிய காலிறுதியில், ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 173 ரன் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது (66.2 ஓவர்). குமார் சுராஜ் 89* ரன், பங்கஜ் குமார் 21, நதீம் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பெங்கால் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 4, முகேஷ் குமார் 3, போரெல், கட்டக் தலா 1 விக்கெட் எடுத்தனர். 2ம் நாளான இன்று பெங்கால் முதல் இன்னிங்சை தொடங்குகிறது. உத்தரகாண்ட் 116: பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் கர்நாடகாவை எதிர்கொள்ளும் உத்தரகாண்ட் 55.4 ஓவரில் 116 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. குணால் 31, அவ்னீஷ் 17, ஆதித்யா தாரே, அகில் ராவத் தலா 14 ரன் எடுத்தனர். கர்நாடகா தரப்பில் எம்.வெங்கடேஷ் 5, கவுதம், கவெரப்பா தலா 2, விஜயகுமார் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய கர்நாடகா முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 123 ரன் எடுத்துள்ளது (26 ஓவர்). சமர்த் 54 ரன், மயாங்க் அகர்வால் 65 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆந்திரா 262/2: மத்திய பிரதேச அணிக்கு எதிராக இந்தூரில் நடக்கும் காலிறுதியில், ஆந்திரா முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்துள்ளது (88 ஓவர்). ஞானேஷ்வர் 24, அபிஷேக் ரெட்டி 22 ரன்னில் வெளியேறினர். கேப்டன் ஹனுமா விஹாரி 16 ரன் எடுத்து காயம் காரணமாக பெவிலியின் திரும்பினார். ரிக்கி புயி 115 ரன், கரண் ஷிண்டே 83 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

மூலக்கதை