இஸ்ரேல் துறைமுகம் முறைப்படி அதானி குழுமத்திடம் ஒப்படைப்பு: பிரதமர் நெதன்யாகு புகழாரம்

தினகரன்  தினகரன்
இஸ்ரேல் துறைமுகம் முறைப்படி அதானி குழுமத்திடம் ஒப்படைப்பு: பிரதமர் நெதன்யாகு புகழாரம்

ஹைபா: இஸ்ரேலின் ஹைபா துறைமுகம் முறைப்படி அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது மகத்தான மைல்கல் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புகழ்ந்துள்ளார். இஸ்ரேலின் 2வது பெரிய துறைமுகமான ஹைபா துறைமுகத்தை தனியார் மயமாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தத்தை சுமார் ரூ.10 ஆயிரம் கோடியில் அதானி குழுமம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஹைபா துறைமுகத்தின் செயல்பாட்டு பொறுப்பை அதானி குழுமத்திடம் முறைப்படி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதானி குழும தலைவர் கவுதம் அதானி கலந்து கொண்டு துறைமுக பதிவு புத்தகத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் பேட்டி அளித்த நெதன்யாகு, ‘‘இது ஒரு மகத்தான மைல்கல். எனது நல்ல நண்பரான இந்திய பிரதமர் மோடியுடன் பேசுகையில், இரு நாடுகளுக்கு இடையே வான்வழி, கடல் வழி என பல்வேறு வழிகளில் போக்குவரத்து இணைப்பு பலப்படுத்த வேண்டுமென கூறினேன். அது இன்று நடந்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது’’ என்றார்.கவுதம் அதானி பேசுகையில், ‘‘கடந்த 6 ஆண்டுகளில் இஸ்ரேலுடன் நாங்கள் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். அந்த வரிசையில், இங்குள்ள டெல் அவிவில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தையும் தொடங்க உள்ளோம். அது, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள எங்களின் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்துடன் இணைந்து செயல்படும். இங்கு துறைமுக ஒப்பந்தத்தை செய்துள்ளதன் மூலம் இன்றைய ஹைபா நகரத்திற்கும் நாளைய ஹைபா நகரத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை பார்ப்பீர்கள்’’ என்றார்.

மூலக்கதை