ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

இந்தூர்: ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று  இந்தூர், ராஜ்கோட், கொல்கத்தா,  பெங்களூரு நகரங்களில் தொடங்குகிறது. நடப்பு ரஞ்சி சீசனின் லீக் சுற்றில் (2022 டிச.13 - ஜன.27) மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. 40 நகரங்களில் நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கி  5 நாட்கள் நடைபெறும்.  லீக் சுற்று ஆட்டங்கள் 4 நாட்கள் அடிப்படையில் நடந்தன.எலைட் பி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழ் நாடு அணி 7 லீக் ஆட்டத்தில் 2 வெற்றி, 4 டிரா, 1 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று 5வது இடம் பிடித்ததால், காலிறுதி வாய்ப்பை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. மகாராஷ்டிரா (26), மும்பை (24) அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறத் தவறின. இன்று தொடங்கும் காலிறுதி ஆட்டங்களில் மோதும் அணிகள் பற்றிய விவரம்... பெங்கால்-ஜார்க்கண்ட்: கொல்கத்தாவில் இன்று தொடங்கும் முதல் காலிறுதியில் ஏ பிரிவில் முதலிடம் பெற்ற  பெங்கால்,  சி பிரிவில் 2வது இடம் பிடித்த ஜார்க்கண்ட் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் பெங்கால் அணி 7 போட்டியில் 4 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன்  32 புள்ளிகளை பெற்றது. ஜார்க்கண்ட் 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 23 புள்ளிகளை பெற்றிருந்தது. கர்நாடகா-உத்ரகாண்ட்: பெங்களூரு சின்னசாமி அரங்கில் இன்று தொடங்கும் 2வது காலிறுதி ஆட்டத்தில் கர்நாடகா-உத்தரகாண்ட் அணிகள் களம் காண்கின்றன. லீக் சுற்றில் கர்நாடகா  அணி சி பிரிவில்  முதல் இடமும், உத்ரகாண்ட்  ஏ பிரிவில் 2வது இடம் பிடித்தன.  லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத கர்நாடகா  4 வெற்றி, 3 டிராவுடன்  35 புள்ளிகளை குவித்திருந்தது. கர்நாடகாவை போல் தோல்வியை சந்திக்காத உத்தரகாண்ட்  3வெற்றி, 4 டிராவுடன் 29 புள்ளிகளை அறுவடை செய்திருந்தது.சவுராஷ்டிரா-பஞ்சாப்: எலைட் பி பிரிவில் முதல் இடம் பிடித்த சவுராஷ்டிரா,  டி பிரிவில் 2வது இடம் பெற்ற பஞ்சாப் 3வது காலிறுதியில் விளையாட உள்ளன. இந்த ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்கிறது. சவுராஷ்டிரா 3 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 26 புள்ளியை வசப்படுத்திருந்தது. பஞ்சாப் 3 வெற்றி, 4 டிராவுடன் 27 புள்ளியை குவித்தது. சவுராஷ்டிரா அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றுள்ள ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தமிழ் நாடு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 2வது இன்னிங்சில் அபாரமாகப் பந்துவீசி 7 விக்கெட் வீழ்த்தினார். இதனால், காலிறுதியில் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மத்திய பிரதேசம்-ஆந்திரா: இந்தூரில் நடக்கும் 4வது காலிறுதியில் டி பிரிவில் முதல் இடம் பிடித்த மத்திய பிரதேசம்,  பி பிரிவில் 2வது இடம் பிடித்த  ஆந்திரா மோதுகின்றன. மத்திய பிரதேசம் 5 வெற்றி, 1 தோல்வி, 1 டிராவுடன் 33 புள்ளிகளை குவித்தது. ஆந்திரா 4 வெற்றி, 2 தோல்வி, 1 டிராவுடன் 26 புள்ளிகள் பெற்றது.

மூலக்கதை