ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு நிதான ஆட்டம்: 4 விக்கெட் இழப்புக்கு 183

தினகரன்  தினகரன்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு நிதான ஆட்டம்: 4 விக்கெட் இழப்புக்கு 183

சென்னை: சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு மிக  நிதானமாக விளையாடி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் மட்டுமே எடுத்துள்ளது. நடப்பு ரஞ்சி சீசனின் கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதும் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. சவுராஷ்டிரா அணிக்கு புதிய கேப்டனாக இந்தியாவின் சுழல் நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். தமிழ்நாடு அணிக்கு நடப்புத் தொடரில் 3வது கேப்டனாக வெளிமாநில வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் கேப்டனாக பொறுப்பு ஏற்றார். ஏற்னவே நடந்த லீக் ஆட்டங்களுக்கு பாபா இந்திரஜித்,  சாய் கிஷோர் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. சாய் கிஷோருக்கு பதிலாக மணிமாறன் சித்தார்த் அணியில் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக  சாய் சுதர்சன்,  நாராயண் ஜெகதீசன் களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரில், 6 ரன் எடுத்திருந்த ஜெகதீசன் ஆட்டமிழந்தார். அடுத்து  இணை சேர்ந்த சாய் சுதர்சன் - பாபா அபராஜித் பொறுமையாக  விளையாடி 2வது விக்கெட்டுக்கு  81 ரன் சேர்த்தனர். இருவரும் தலா 45 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பிறகு மிக மிக நிதானமாக ஆமை வேகத்தில் விளையாடிய கேப்டன் ரஞ்சல் பால் 119 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்த சில ஓவர்களில்  முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் மட்டுமே எடுத்திருந்தது (90 ஓவர்). பொறுமையுடன் விளையாடிய முன்னாள் கேப்டன்கள்  இந்திரஜித்  45 ரன், விஜய் சங்கர் 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். சவுராஷ்டிரா தரப்பில் சிராக் ஜானி 2, தர்மேந்திரசிங் ஜடேஜா, யுவ்ராஜ்சிங் டோடியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரவீந்திர ஜடேஜா விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அதேநேரத்தில் சவுராஷ்டிரா பந்து வீச்சாளர்கள் எல்லோரும் கட்டுக்கோப்பாகவும், சிக்கனமாகவும் பந்து வீசினர். இன்னும் 6 விக்கெட் கைவசம் இருக்க, தமிழ் நாடு அணி முதல் இன்னிங்சில் கவுரமான ஸ்கோரை  எட்ட 2வது நாளான இன்று பொறுமையாக, பொறுப்பாக விளையாடக் கூடும்.

மூலக்கதை