வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் கோர்ட் வளாகத்தில் புது மணப்பெண் சுட்டுக் கொலை: பாகிஸ்தானில் பயங்கரம்

தினகரன்  தினகரன்
வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் கோர்ட் வளாகத்தில் புது மணப்பெண் சுட்டுக் கொலை: பாகிஸ்தானில் பயங்கரம்

லாகூர்: பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர், வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால், அவரது தந்தையால் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி அடுத்த பிரபாத்தில் வசிக்கும் பழங்குடியின பெண், தான் விரும்பியவரை திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு கேட்டு, கராச்சி நகர நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் மறைந்திருந்த அவரது தந்தை, தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தனது மகளை சுட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஷபீர் சேதர் கூறுகையில், ‘வஜிரிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு கேட்டும், தனது திருமணம் தொடர்பான வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்யவும் நகர நீதிமன்றத்திற்கு வந்தார். அங்கு மறைந்திருந்த தந்தையால், நீதிமன்ற வளாகத்தில் அந்தப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்; தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த கவுரவ கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை, அவரது சகோதரர் கைது செய்யப்பட்டனர்’ என்றார்.

மூலக்கதை