நடிகை அதியாஷெட்டியுடன் காதல் திருமணம்; ஒற்றுமை பயணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களை தேடுகிறோம்: கே.எல்.ராகுல் உருக்கம்

தினகரன்  தினகரன்
நடிகை அதியாஷெட்டியுடன் காதல் திருமணம்; ஒற்றுமை பயணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களை தேடுகிறோம்: கே.எல்.ராகுல் உருக்கம்

மும்பை: இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கே.எல்.ராகுலும், இந்தி நடிகை அதியா ஷெட்டியும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், அவர்களது திருமணம் நேற்று மாலை மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் அதியா ஷெட்டியின் தந்தையும் நடிகருமான சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் எளிய முறையில் நடைபெற்றது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த, நடிகர் சுனில் ஷெட்டி, தான் மாமனார் ஆகிவிட்டதாக கூறி இனிப்புகளை வழங்கினார்.திருமணத்தில் இரண்டு தரப்பில் இருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா திருமணத்தில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. நிகழ்ச்சியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.ஐபிஎல் போட்டிக்கு பிறகு, திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாக நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார். கே.எல். ராகுல், அதியா ஷெட்டியின் திருமணத்திற்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக புகைப்படங்களை பகிர்ந்த கே.எல்.ராகுல், “உனது வெளிச்சத்தில் இருந்து எப்படி நேசிக்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொள்கிறேன். இன்று, எங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுடன் நாங்கள் வீட்டில் திருமணம் செய்துகொண்டோம்.அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் அளித்தது. நன்றியுணர்வும் அன்பும் நிறைந்த இதயத்துடன், இந்த ஒற்றுமைப் பயணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோம்” என்று கூறியுள்ளார்.

மூலக்கதை