உலக கோப்பை: இந்திய பெண்கள் வெற்றி | ஜனவரி 22, 2023

தினமலர்  தினமலர்
உலக கோப்பை: இந்திய பெண்கள் வெற்றி | ஜனவரி 22, 2023

போர்ட்செப்ஸ்ட்ரூம்: இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பை தொடரின் ‘சூப்பர்–6’ போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் நடக்கிறது. தற்போது ‘சூப்பர்–6’ சுற்று போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்திய அணி ‘குரூப் 1’ ல் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி வீழ்ந்தது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை எதிர் கொண்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

சோப்ரா கலக்கல்

இலங்கை அணி துவக்கத்திலயே அதிர்ந்தது. டிடாஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் நிதிமி சேனார்த்தனா டக் அவுட்டானார். மன்னாத் காஷ்யப் ‘சுழலில்’ நிசான்சலா, தேவ்மி தலா 2 ரன்களில் சிக்கினர். தன் பங்கிற்கு சுழற்பந்துவீச்சாளர் பார்சவி சோப்ரா கலக்கினார். இவரது பந்துவீச்சில் கேப்டன் விஷ்மி (25), மனுதி (5) உள்ளிட்டோர் ஆட்டமிழந்தனர். பின்வரிசை வீராங்கனைகளும் விரைவில் திரும்ப, இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராஷ்மி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சோப்ரா 4, மன்னாத் காஷ்யப் 2 விக்கெட் கைப்பற்றினர்.

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (15), ரிச்சா ஜோஷ் (4) ஏமாற்றினர். சுவேதா 13 ரன்களில் திரும்பினார். கேப்டன் சவுமியா திவாரி நம்பிக்கை அளித்தார். ஐந்தாவது ஓவரில் இவர் மூன்று பவுண்டரி விளாசினார். இந்திய அணி 7.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சவுமியா (28), திரிஷா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மூலக்கதை