ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி: சிட்சிபாஸ், கோர்டா முன்னேற்றம்

தினகரன்  தினகரன்
ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி: சிட்சிபாஸ், கோர்டா முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றில் ரஷ்யாவின் எலனா ரைபாகினாவுடன் (23 வயது, 25வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து) 4-6, 4-6 என நேர் செட்களில் போராடி தோற்றார். இப்போட்டி 1 மணி, 29 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காஃப் (18 வயது, 7வது ரேங்க்) 5-7, 3-6 என்ற நேர் செட்களில் லாத்வியா வீராங்கனை யெலனா ஓஸ்டபென்கோவிடம் (25 வயது, 17வது ரேங்க்) தோல்வியைத் தழுவினார்.அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா (28 வயது, 3வது ரேங்க்) தனது 4வது சுற்றில் பார்போரா கிரெஜ்சிகோவாவை (செக்., 27 வயது, 23வது ரேங்க்) 7-5, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 4 மணி நேர போராட்டம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இத்தாலி வீரர் யானிக் சின்னருடன் (21 வயது, 16வது ரேங்க்) மோதிய கிரீஸ் நட்சத்திரம் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (24 வயது, 4வது ரேங்க்) 6-4, 6-4 என முதல் 2 செட்களையும் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடும் நெருக்கடி கொடுத்த சின்னர் 6-3, 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.5வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி சின்னரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த சிட்சிபாஸ் 6-4, 6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 4 மணி நேரத்துக்கு நீடித்தது.மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 3-6, 6-3, 6-2, 1-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் ஹூபர்ட் ஹர்காக்சை (போலந்து) வீழ்த்தினார். இப்போட்டி 3 மணி, 28 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. செக் குடியரசின் ஜிரி லெகக்கா, ரஷ்யாவின் கரென் கச்சனோவ் ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.சானியா ஏமாற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் அன்னா டானிலினாவுடன் (கஜகஸ்தான்) இணைந்து களமிறங்கிய இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா 4-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் உக்ரைனின் கலினினா - வான் அலிசான் (பெல்ஜிடம்) ஜோடியிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இந்த தோல்வியுடன் கிராண் ஸ்லாம் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியாவின் டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.கலப்பு இரட்டையர் பிரிவில் சக இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் ஜோடி சேர்ந்துள்ள அவர், அந்த பிரிவில் சாம்பியன் பட்டத்துடன் விடை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை