பஞ்சாபி பாடகர் கொலை வழக்கு; மூளையாக செயல்பட்ட தாதா கலிபோர்னியாவில் கைது: இன்டர்போல் உதவியுடன் அதிரடி

தினகரன்  தினகரன்
பஞ்சாபி பாடகர் கொலை வழக்கு; மூளையாக செயல்பட்ட தாதா கலிபோர்னியாவில் கைது: இன்டர்போல் உதவியுடன் அதிரடி

அமிர்தசரஸ்: பாடகர் சித்து முசேவாலா கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியான சதீந்தர்ஜீத் சிங்கை கலிபோர்னியாவில் இன்டர்போல் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். பஞ்சாபி பாடகர் சித்து முசேவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவனும், பாடகரின் கொலைக்கு மூளையாக செயல்பட்டவனுமான பிரபல தாதா கோல்டி ப்ரார் என்ற சதீந்தர்ஜீத் சிங்கை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பஞ்சாப் உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பாடகர் சித்து முசேவாலா கொலை சம்பவத்தின் பின்னணியில் சதீந்தர்ஜீத் சிங், பஞ்சாப் சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்டோர் உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பியோடிய சதீந்தர்ஜீத் மீது 16க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மாவட்ட நீதிமன்றம், சதீந்தர்ஜீத்துக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது.மேலும், சதீந்தர்ஜீத்துக்கு எதிராக இன்டர்போல் தரப்பில், ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கலிபோர்னியாவில் இன்டர்போல் உதவியுடன் சதீந்தர்ஜீத் சிங் கைது செய்யப்பட்டார்’ என்று தெரிவித்தன. ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சகமோ அல்லது மற்ற புலனாய்வு அமைப்புகளோ சதீந்தர்ஜீத் சிங் கைது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை