அடுத்தடுத்து மாடுகள் மீது மோதி 5வது முறையாக விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்

தினகரன்  தினகரன்
அடுத்தடுத்து மாடுகள் மீது மோதி 5வது முறையாக விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்

காந்திநகர்: அடுத்தடுத்து மாடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதியதில், தற்போது 5வது முறையாக குஜராத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில்,  உத்வாடா மற்றும் வாபி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் குறுக்கே தண்டவாளத்தில் மாடு சென்றதால், வந்தே பாரத் ரயில் விபத்தில் சிக்கியது. இதனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முன்பகுதி சேதமடைந்தது. தொடர்ந்து ரயிலை லோகோ பைலட் நிறுத்தினர். அதன்பின் முகப்பு பகுதி ஓரளவு சரி செய்யப்பட்டு, சுமார் அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் அந்த ரயில் இயக்கப்பட்டது. இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில், ‘உத்வாடா மற்றும் வாபி இடையே லெவல் கிராசிங் கேட் அருகில் தண்டவாளத்தில் சென்ற மாடு, ரயிலின் முன்பகுதியில் மோதியது. சிறிது நேர நிறுத்தத்திற்குப் பிறகு மாலை 6.35 மணியளவில் மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது’ என்றார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுவரை ஐந்தாவது முறையாக விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை