2வது சுற்றுக்கு முன்னேறி ஜப்பான் அசத்தல்: தப்பி பிழைத்தது ஸ்பெயின்

தினகரன்  தினகரன்
2வது சுற்றுக்கு முன்னேறி ஜப்பான் அசத்தல்: தப்பி பிழைத்தது ஸ்பெயின்

தோகா: 32 அணிகள் பங்கேற்றுள்ள 22வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. இதில், நேற்றிரவு 12.30 மணிக்கு கலீஃபா சர்வதேச அரங்கில் நடந்த போட்டியில் இ பிரிவில் உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள ஸ்பெயின், 24வது இடத்தில் உள்ள ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஸ்பெயின் முதல் போட்டியில் கோஸ்டாரிக்காவை வீழ்த்திய நிலையில் 2வது போட்டியில் ஜெர்மனியிடம் டிரா செய்திருந்தது. மறுபுறம் முதல் போட்டியில் ஜெர்மனியை வீழத்திய ஜப்பான், 2வது போட்டியில் கோஸ்டாரிக்காவிடம் தோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றிபெற்றால் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், ஆட்டம் பரபரப்பாக இருந்தது. 11வது நிமிடத்திலேயே ஸ்பெயினின் மொராட்டா முதல் கோலை அடித்து அசத்த, ரசிகர்கள் அனைவரும் இது ஒன் சைடட் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். அதற்கேற்ப ஸ்பெயின் வீரர்கள் முதல் பாதியில் அதிக நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். முதல் பாதி ஆட்ட நேரம் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் ஜப்பான் அணி, 48வது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து அசத்தியது. அந்த அணியின் டோவன் இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற நிலை ஏற்பட, மீண்டும் 51வது நிமிடத்தில் ஜப்பானி்ன் டனகா 2வது கோல் அடித்தார்.இதன் பின்னர் ஸ்பெயின் அணி வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கினர். அனால் ஸ்பெயினின் அனைத்து முயற்சிகளையும் ஜப்பான் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இரண்டாம் பாதி ஆட்ட நேர இறுதியில் கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதன் மூலம் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அசத்தியது. அதுமட்டுமல்லாமல் லீக் சுற்றில் முன்னாள் சாம்பியன் அணிகளான ஜெர்மனி மற்றும் ஸ்பெயினை வீழ்த்தியதன் மூலம் ஜப்பான் இ பிரிவில் முதல் இடம் பிடித்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் ஜெர்மனி அணியை காட்டிலும் கூடுதல் கோல் அடித்திருந்ததால், ஸ்பெயின் அணியும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக இந்த ஆட்டம் தொடங்கியபோது ஸ்பெயின் அணியே வெற்றிபெறும் என்றும், ஜெர்மனி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக ஜெர்மனியை முதல் போட்டியில் வீழ்த்தியதோடு, மூன்றாவது போட்டியில் ஸ்பெயினையும் வீழ்த்தி ஜப்பான் அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளது. ஜப்பானின் இந்த வெற்றியை அந்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.ஆசியாவும் ஆதிக்கம்...ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருப்பது ஆசியாவிலும் சிறந்த கால்பந்து அணி, வீரர்கள், பயிற்சியாளர்கள் இருப்பதை உலக அரங்கிற்கு உணர்த்தியுள்ளனர். உலகக்கோப்பை தொடரில் ஆசிய அணிகள் எதுவும் இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ஆனால் ஜப்பான், சவுதி அரேபியா போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கால்பந்து உலகக்கோப்பை எட்டாக்கனி அல்ல.இன்றைய போட்டிகள்இரவு 8.30 மணிக்கு எப் பிரிவில் கானா-உருகுவே அணிகள் மோதுகின்றன.இரவு 8.30 மணிக்கு மற்றொரு போட்டியில் இதே பிரிவில் போர்ச்சுக்கல்-தென்கொரியாவை சந்திக்கிறது.நள்ளிரவு 12.30 மணிக்கு ஜி பிரிவில் செர்பியா-சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது.நள்ளிரவு 12.30 மணிக்கு ஜி பிரிவில் மற்றொரு போட்டியில் பிரேசில்-கேமரூன் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.ரவுன்ட் ஆப் 16 சுற்றில் ஜப்பான்-குரோஷியா ஸ்பெயின்- மொராக்கோ மோதல்ரவுன்ட் ஆப் 16 சுற்றில் ஜப்பான் வரும் 5ம் தேதி இரவு 8.30 மணிக்கு குரோஷி்யாவுடன் மோத உள்ளது. இதேபோல் ஸ்பெயின் 6ம் தேதி இரவு 8.30 மணிக்கு மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

மூலக்கதை