முதல் நாளே 506/4ரன்; இங்கிலாந்து புதிய சாதனை

தினகரன்  தினகரன்
முதல் நாளே 506/4ரன்; இங்கிலாந்து புதிய சாதனை

ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில், முதல் நாளே அதிக ரன் குவித்து 112 ஆண்டு வரலாற்று சாதனையை நொறுக்கி, இங்கிலாந்து புதிய சாதனையை படைத்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இங்கிலாந்து அணி அங்கு  3 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  ராவல்பிண்டியில் நேற்று முதல் டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. அசத்தலாக விளையாடிய  தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரெவ்லி, பென் டக்கெட் ஆகியோர் சதம் விளாசியதுடன்  முதல் விக்கெட்டுக்கு 233 ரன் குவித்தனர். ஜாக் 122ரன்,  பென் 107 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜோரூட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இணை சேர்ந்த  ஒல்லி போப், ஹாரி புரூக் இணை 4வது விக்கெட்டுக்கு  176 ரன் சேர்த்தது. சதம் விளாசிய போப் 108 ரன்னில் ஆட்டமிழந்தார்.  கூடவே புரூக்கும் சதம் அடித்தார்.  முதல் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 75ஓவரில்  4 விக்கெட் இழப்புக்கு 506ரன் குவித்தது.   புரூக் 101*, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 34* ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்கின்றனர். பாக் தரப்பில்  ஜாகித் முகமது 2 விக்கெட் வீழத்தினார்.புதிய சாதனை: டெஸ்ட் போட்டி வரலாறில் முதல் நாளே  அதிக ரன் குவித்த அணி என்ற புதிய சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன்பு  1910ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 494ரன் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து. டெஸ் போட்டியில் ஒரு அணி 2 இன்னிங்சில் 5 வீரர்கள் சதம் விளாசியதே சாதனையாக உள்ளது. ஒரு இன்னிங்சில் 4 வீரர்கள் சதம் விளாசிய சாதனையை ஏற்கனவே இங்கிலாந்து(1938) படைத்துள்ளது. அதில் ஒன்று இரட்டைச் சதம். ஒருவேளை இன்று ஸ்டோக்சும் சதம் விளாசினால் இங்கிலாந்து மீண்டும் புதிய சாதனை படைக்கலாம்.

மூலக்கதை