காங்கிரசில் இணைந்த குஜராத் முன்னாள் அமைச்சர்: சித்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!

தினகரன்  தினகரன்
காங்கிரசில் இணைந்த குஜராத் முன்னாள் அமைச்சர்: சித்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!

சூரத்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் அம்மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜவை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதேவேளை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சியினரும் மாற்று கட்சிக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநில பாஜவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெய் நாராயண் வியாஸ் கடந்த 5ம் தேதி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பதான் மாவட்டம் சித்பூர் தொகுதியை சேர்ந்த இவர், பதான் மாவட்டத்தை கட்சியில் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், எந்த தொகுதி பிரச்னையையும் கட்சி மேலிடம் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில், பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் சித்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை