பெண்களை பற்றி இழிவான பேச்சு மன்னிப்பு கேட்டார் யோகா குரு ராம்தேவ்

தினகரன்  தினகரன்
பெண்களை பற்றி இழிவான பேச்சு மன்னிப்பு கேட்டார் யோகா குரு ராம்தேவ்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த யோகா பயிற்சி முகாமில் பங்கேற்ற பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், ‘‘பெண்கள் புடவையில் அழகாக இருப்பார்கள், எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்’’என்றார். இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகான்கர் பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அடுத்த 72 மணிநேரத்துக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதையடுத்து, பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது மன்னிப்பு கடிதத்தை மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகான்கர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் பாபா ராம்தேவ், ‘பெண்கள் அதிகாரத்துக்காக எப்போதும் பணியாற்றுவேன். ஒன்றிய அரசின் பெண் குழந்தைகள் காப்போம் என்ற திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை நான் ஆதரித்துள்ளேன். ஆதலால் எனக்கு பெண்களை அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் யாருடைய மனதை புண்படுத்தியிருந்தாலும் அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்’ என கூறி உள்ளார்.

மூலக்கதை