சிறையில் சுகேஷூக்கு சித்ரவதையா? அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
சிறையில் சுகேஷூக்கு சித்ரவதையா? அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி மண்டோலி சிறையில் சுகேஷ் சந்திரசேகர் சித்ரவதை செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், ஒன்றிய மற்றும் டெல்லி அரசுகள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர லஞ்சம், தொழிலதிபர்களை போனில் மிரட்டி ரூ.200 கோடி பறித்த ஆகிய வழக்குகளில் டெல்லி மண்டோலி சிறையில் உள்ள சுகேஷ், டெல்லி சிறைத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தன்னிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டியதாக குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து, மண்டோலி சிறையிலும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும், வேறு சிறைக்கு மாற்றக் கோரியும் மீண்டும் அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.இந்த வழக்கு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மனுதார் மீண்டும் புகார் தந்துள்ளார். அவரது புகாரை நிராகரிக்க முடியாது. எங்கோ, ஏதோ தவறு நடக்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உண்மையான அறிக்கையை தர வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய, டெல்லி அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். விசாரணயைில், அந்தமான் உட்பட நாட்டின் வேறெந்த சிறைக்கும் மாற தயாராக இருப்பதாக சுகேஷ் தரப்பில் அவரது வக்கீல் தெரிவித்தார்.

மூலக்கதை