டெல்லி புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த போலி சிபிஐ அதிகாரி; அதிரடி கைது

தினகரன்  தினகரன்
டெல்லி புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த போலி சிபிஐ அதிகாரி; அதிரடி கைது

புதுடெல்லி: டெல்லி புதிய தமிழ்நாடு இல்லத்தில் போலி ஆவணங்களை காட்டி சிபிஐ அதிகாரி போன்று தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த நபரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. டெல்லி சாணக்கியாபுரியில் புதிய தமிழ்நாடு இல்லம் உள்ளது. இங்கு முதல்வர், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் அரசு நிமித்தமான வேலைக்கு வரும்போது அறை எடுத்து தங்குவது வழக்கமாகும். இந்த நிலையில், டெல்லி புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த போலி சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த முதல் கட்ட விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த நிவாச ராவ் ஐ.பி.எஸ் என்ற பெயரில் அறை எடுத்து, எண் 305 தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிபிஐ அலுவலகத்திற்கு சென்ற அவர் போலியான ஆவணங்களை காட்டி உள்ளே செல்ல முயன்றார். அவர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த சி.பி.ஐ அதிகாரிகள், இன்னொரு நாள் அனுமதி தருகிறோம் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். அவரை தொடர்ந்து கண்காணித்த சி.பி.ஐ அதிகாரிகள், அந்த நபர் புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிரடியாக தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற பத்துக்கும் மேற்பட்ட சிபி.ஐ அதிகாரிகள் மோசடி நபரை சுற்றி வளைத்துள்ளனர். அவரிடம் இருந்து சிபிஐயில் பணியாற்றுவதற்கான போலி அடையாள அட்டை, போலி ஆதார் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்களை வைத்துதான் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு இல்லைத்தில் அறையை அவர் முன்பதிவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நபர் பயங்கரவாத அமைப்புடன் ஏதேனும் தொடர்பில் இருக்கிறாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

மூலக்கதை