மாணவனுக்கு தீவிரவாதி பட்டம் பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
மாணவனுக்கு தீவிரவாதி பட்டம் பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்

உடுப்பி: கர்நாடகாவில் தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், வகுப்பின் போது முஸ்லிம் மாணவரை ‘தீவிரவாதி’ என்று குறிப்பிட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் மற்றும் பேராசிரியரிடையே கடந்த வாரம் வாக்குவாதம் நடைபெற்றது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், வகுப்பின் போது பேராசிரியர் ஒருவர், வகுப்பறையில் மாணவனின் பெயரை கேட்கிறார். அவர் முஸ்லிம் பெயரை சொன்னதும், ‘‘ஓ, நீ கசாப் மாதிரியா!’’ என்கிறார். மும்பை தீவிரவாத தாக்குதலில் துப்பாக்கி ஏந்தி வந்த பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2012ல் தூக்கிலிடப்பட்டான். அவனை குறிப்பிடும்படி பேராசிரியர் குறிப்பிட்டதால் மறுப்பு தெரிவித்து மாணவர், ‘‘இந்த நாட்டில் முஸ்லிமாக இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற வேதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் என்னுடைய மதத்தை பற்றி கேலி பண்ணக் கூடாது சார். இது ஒன்றும் வேடிக்கை அல்ல. இழிவான செயல்’’ என வேதனையும் ஆவேசமும் கலந்தபடி பேசுகிறார். இதைக் கேட்ட ஆசிரியர், ‘‘நீ என் மகன் மாதிரி’’ எனக் கூறி சமாதானப்படுத்த முயல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலக்கதை