ஸ்பெயின்-ஜெர்மனி போட்டி டிரா: தலா ஒரு கோல் அடித்ததால் சமனில் முடிந்தது

தினகரன்  தினகரன்
ஸ்பெயின்ஜெர்மனி போட்டி டிரா: தலா ஒரு கோல் அடித்ததால் சமனில் முடிந்தது

தோகா: 32 அணிகள் பங்கேற்றுள்ள 22வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு 12.30 மணிக்கு அல் பேட் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் இ பிரிவில் உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள ஸ்பெயின், 4முறை முன்னாள் சாம்பியன் பட்டம் வென்ற தரவரிசையில் தற்போது 11வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணிகள் மோதின. முதல் போட்டியில், கோஸ்டாரிக்காவை பந்தாடிய உத்வேகத்தில் ஸ்பெயின் களம் இறங்கியது. மறுபுறம் ஜப்பானிடம் முதல் போட்டியில் தோற்றதால் கட்டாய வெற்றி நெருக்கடியில் ஜெர்மனி ஆடியது. கடந்த போட்டியை போலவே ஸ்பெயின் கோல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெர்மனி தடுப்பரணை வலுப்படுத்தி சவால் அளித்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. பின்னர் பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில், பெஞ்சில் இருந்து வந்த 8 நிமிடங்களுக்குப் பிறகு ஸ்பெயின் வீரர் ஆல்வரோ மொராட்டா 62வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதற்கு பதில் கோல் அடிக்க ஜெர்மனி கடுமையாக போராடியது. ஆனால் ஸ்பெயினின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. ஆட்டம் 80 நிமிடங்களை தாண்டிய நிலையில் ஜெர்மனி வீரர்கள் அட்டாக்கிங்கில் ஈடுபட்டனர். இதன் பலனாக ஆட்டத்தில் 83வது நிமிடத்தில், ஜெர்மனியின் நிக்லாஸ் புல்க்ரக் பதில் கோல் அடித்தார். பின்னர் கோல் எதுவும் அடிக்கப்படாததால் போட்டி 1-1 என சமனில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் சுமார் 65 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் ஸ்பெயின் வீரர்கள் வைத்திருந்தனர். அதன் மூலம் 637 பாஸ்களை அந்த அணி மேற்கொண்டது. ஜெர்மனி 352 பாஸ்களை செய்தது. ஜெர்மனி 10 முறையும், ஸ்பெயின் 7 முறையும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஜெர்மனி வீரர்கள் 3 பேரும், ஸ்பெயின் வீரர் ஒருவரும் மஞ்சள் அட்டை பெற்றனர். முன்னதாக இந்த பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் கோஸ்டாரிக்கா 1-0 என ஜப்பானை வீழ்த்தியது. தற்போது இந்த பிரிவில் ஸ்பெயின் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான், கோஸ்டாரிக்கா தலா 3 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளன. ஜெர்மனி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த பிரிவில் கடைசி லீக் போட்டியில் ஸ்பெயின் வரும் 2ம் தேதி ஜப்பானை எதிர்கொள்கிறது. இதில் டிரா செய்தாலே ஸ்பெயின் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதிபெற்று விடும். இதேபோல் ஜெர்மனி- கோஸ்டாரிக்காவுடன் மோதுகிறது. இதில் ஜெர்மனி வென்றாலும், ஸ்பெயின்-ஜப்பான் போட்டியின் முடிவை பொறுத்தே அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும். தற்போதுவரை 4 அணிகளுக்குமே அடுத்த சுற்று வாய்ப்பு உள்ளது.

மூலக்கதை