சீனாவை விடாமல் துரத்தும் கோவிட்: ஊரடங்கிற்கு எதிராக மக்கள் கோபம்

தினமலர்  தினமலர்
சீனாவை விடாமல் துரத்தும் கோவிட்: ஊரடங்கிற்கு எதிராக மக்கள் கோபம்

பெய்ஜிங்: சீனாவில் கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்துவதற்கு எதிராக அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த படங்களும், வீடியோக்களும் அந்நாட்டு சமூக வலைதளங்களில் பரவுகிறது.

உலகளவில் கோவிட் பரவல் குறைந்துள்ள நிலையில், அது தோன்றிய இடமாக கருதப்படும் சீனாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஓரிரு நாட்களாக 30 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று வரை அங்கு கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,07,802 ஆக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 39,791 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதனால், அங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு கொண்டே வருகிறது. 'ஜிரோ கோவிட் ' என்ற கொள்கையை சீன அரசு கடைபிடித்து வருகிறது. இதனால், அங்கு பரவல் அதிகரிக்க, கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்படுகிறது. ஏராளமான நகரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக, அந்நாட்டு மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஷின்ஜியாங் பகுதியில் உள்ள உரும்கி நகரில், கட்டடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டே பாது 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். உயிரிழப்பிற்கு கட்டுப்பாடுகளும் ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளதாக அங்கிருப்பவர்கள் குற்றம்சாட்டியது, மக்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. அந்த கட்டடத்தின் ஒரு பகுதி வழியாக செல்வதற்கு, கோவிட் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், தீவிபத்து ஏற்பட்ட போது பலரால் தப்பி செல்ல முடியவில்லை என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. இதனை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

உரும்கியின் வுலுமுகி சாலையில், நேற்று இரவு மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவிக்க கூடிய பொது மக்கள், அதனை போராட்டமாக மாற்றினர். அது இன்று காலை வரை நீடித்தது.

கட்டுப்பாடுகளை எதிர்த்து வெற்று தாள்களை ஏந்தி போராடியவர்கள், ஊரடங்கை நீக்க வேண்டும். உரும்கி, ஷின்ஜியாங் சீனா மொத்தத்திற்கும் ஊரடங்கை நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி செய்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

லன்ஜவு என்ற நகரிலும், கோவிட் ஊழியர்களின் முகாமை அப்பகுதியினர் அகற்றியதுடன், சோதனை அறைகளை இடித்து தள்ளி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் யாருக்கும் கோவிட் பாதிக்காத நேரத்திலும், தங்களை வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

2.5 கோடி பேர் வசிக்கும் ஷாங்காயிலும் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கும் போராட்டம் நடக்கிறது. மக்களுக்கு சேவையாற்றுங்கள். விடுதலை வேண்டும்.. சுகாதார குறியீடுகள் தேவையில்லை என கோஷம் எழுப்பினர்.

தலைநகர் பெய்ஜிங் அருகிலும் உள்ள பகுதியில் ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி நடத்தினர். ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இருப்பினும், 'ஜீரோ கோவிட்' என்ற கொள்கையை சீன அதிகாரிகள் ஆதரித்து வருகின்றனர். இதன் மூலம் பொது மக்களின் உயிரிழப்பை தடுக்க முடியும். சுகாதார அமைப்புக்கு நெருக்கடி ஏற்படுத்துவதை தடுக்க முடியும் எனக்கூறியுள்ளனர். பொது மக்கள் எதிர்ப்பு மற்றும் பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் இந்த கொள்கையை தொடர அதிகாரிகள் ஆதரவு அளித்துள்ளனர்.

பெய்ஜிங்: சீனாவில் கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்துவதற்கு எதிராக அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நகரங்களில்

மூலக்கதை