வணிக பயன்பாட்டுக்கு நிலம்: லாபத்தில் பங்கு தர சட்டம்?

தினமலர்  தினமலர்
வணிக பயன்பாட்டுக்கு நிலம்: லாபத்தில் பங்கு தர சட்டம்?

சென்னை : 'வணிக பயன்பாட்டு நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு கிடைக்கும் வகையில், சட்டம் கொண்டு வர வேண்டும்' என, மாநில திட்டக் குழுவுக்கு தகவல் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் கிராமத்தில், 'சிப்காட்' தொழில் வளாகம் அமைக்க, வசந்தா கங்காதரன், நவ்ஷீன் பாத்திமா, அம்ரீன் பாத்திமா ஆகியோரின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

அதற்கு சொற்ப இழப்பீடுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு, அந்த தொகையும் தரப்படாமல் கருவூலத்தில் உள்ளது.

மேல்முறையீடு


இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் சிறப்பு தாசில்தாரிடம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்களை கோரினர். அதற்கு உரிய தகவல்கள் வராததால், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள், தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, நில உரிமையாளர்கள், சிப்காட் சிறப்பு தாசில்தார் ஆஜராகினர்.

'மனுதாரர்களுக்கான தொகை கருவூலத்தில் உள்ளது; அந்த பில்களும் காலாவதியாகி விட்டன' என, சிறப்பு தாசில்தார் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், எஸ்.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு:

வணிக பயன்பாட்டிற்கு நிலங்களை கையகப்படுத்தும் போது, உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை.

இதற்காக, அதிகாரிகள், நீதிமன்றங்கள் என, ஏராளமான கதவுகளை நில உரிமையாளர்கள் தட்டுகின்றனர்.

இந்த வழக்கிலும், 1999 முதல் நிலத்துக்கான இழப்பீடு தொகையை பெற முடியவில்லை.

வணிக பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தும் போது, உரிமையாளர்களுக்கு நிலத்துக்கான இழப்பீட்டை முழுதும் தந்து விட்டால், அந்த தொகையை விரைவில் செலவு செய்து விடுவர்.

அரசு மீது நம்பிக்கை வரும்

மாறாக, எந்த நிறுவனத்துக்காக, அரசு நிலத்தை கையகப்படுத்தியதோ, அந்த நிறுவனம் நில உரிமையாளருக்கு இழப்பீடு தொகையின் ஒரு பகுதியை வழங்க வேண்டும்.

மீதமுள்ள இழப்பீடு தொகைக்கு பதில், சம்பந்தப்பட்ட நிறுவனம் லாபத்தில் ஒரு பகுதியை, நில உரிமையாளர்களுக்கு பங்காக தர வேண்டும். இதுகுறித்து, மாநில திட்டக் குழு உரிய சட்டத்தை கொண்டு வர ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இதே முறையை, புதிய விமான நிலைய திட்டம் உள்ளிட்டவற்றுக்கு செயல்படுத்தினால், நிலத்தை தரும் மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை வரும்.

இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

சென்னை : 'வணிக பயன்பாட்டு நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு கிடைக்கும் வகையில், சட்டம் கொண்டு வர வேண்டும்' என, மாநில திட்டக் குழுவுக்கு தகவல்

மூலக்கதை