எங்களுக்கு வரும் மிரட்டல்களை எண்ணுவதில்லை!: 'ஈஷா யோகா' நிறுவனர் சத்குரு

தினமலர்  தினமலர்
எங்களுக்கு வரும் மிரட்டல்களை எண்ணுவதில்லை!: ஈஷா யோகா நிறுவனர் சத்குரு

கோவை : ''அச்சுறுத்தல் எங்களுக்கு புதிதல்ல; ஆண்டுக்கு எத்தனை முறை கொலை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நாங்கள் எண்ணிக் கொண்டிருப்பது இல்லை,'' என, 'ஈஷா யோகா' நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் நடந்த, 'குக்கர்' குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக், 24, கோவை வந்திருந்ததும், சமூக வலைதள முகப்பு படமாக ஈஷா யோகாவில் இருக்கும் ஆதியோகி சிலை இருந்ததும், போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனால், ஈஷா யோகா மையத்தை முகமது ஷாரிக் குறி வைத்திருக்கலாம் என, போலீசார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஈஷா யோகா நிறுவனர் சத்குரு அளித்த பேட்டி: ஆதியோகி சிலை மிகவும் பிரபலமாக இருப்பதும், பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிக்கியவர் கூட ஆதியோகியின் படம் வைத்திருப்பதும் எனக்கு மகிழ்ச்சியே. அச்சுறுத்தல் எங்களுக்கு புதிதல்ல. ஆண்டுக்கு சராசரியாக எத்தனை முறை கொலை மிரட்டல் வருகிறது என்றெல்லாம் நான் எண்ணிக் கொண்டிருப்பதில்லை; மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

நான் வழக்கமாக சென்று வரும் மைசூரு - மங்களூரு, மைசூரு - கோவை என்ற வழித்தடத்தில் தான் அந்த நபரும் சென்று வந்திருக்கிறார். இதையெல்லாம் நாம் எளிதாக கடந்து செல்ல பழகிக்கொள்ள வேண்டும்.

அவர் தன் அடையாளத்தை மறைத்துக் கொள்ள, புத்திசாலித்தனமாக முயற்சித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் புத்தர் உருவச்சிலைக்கு என்ன நேர்ந்தது என்று அனைவருக்கும் தெரியும். வழிபாட்டுக்குரிய சிலை என்று கூறப்படும் அனைத்தையும் அவர்கள் உடைத்தெறிந்தனர்.

சில பயங்கரவாதிகள் இப்படித் தான் நடந்து கொள்கின்றனர். அவர்கள் ஆதியோகி சிலையை பயங்கரமான ஒன்றாக கருதுகின்றனர். அந்த சிலை அவர்களை ஏதோ ஒரு வகையில் காயப்படுத்துகிறது. நாங்கள் அந்த சிலையை வழிபடுவதாக அவர்கள் நினைக்கின்றனர். நாங்கள் அந்த சிலையை வழிபடவில்லை. அந்த சிலையை குறிப்பிட்ட ஒரு திசை நோக்கி செல்வதற்கான ஒரு உந்துதலாக கருதுகிறோம். இவ்வாறு சத்குரு கூறினார்.

கோவை : ''அச்சுறுத்தல் எங்களுக்கு புதிதல்ல; ஆண்டுக்கு எத்தனை முறை கொலை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நாங்கள் எண்ணிக் கொண்டிருப்பது இல்லை,'' என, 'ஈஷா யோகா' நிறுவனர் சத்குரு

மூலக்கதை