காதல் மனைவியை கொளுத்திய கணவன்; மரண வாக்குமூல 'வீடியோ'வால் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
காதல் மனைவியை கொளுத்திய கணவன்; மரண வாக்குமூல வீடியோவால் அதிர்ச்சி

கண்டமங்கலம்: காதல் கணவன் தன்னை தீ வைத்து கொளுத்தியதாக, மனைவி அளித்த மரண வாக்குமூலம், சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 30; டிரைவர். இவரும், ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்த சங்கீதா, 24, என்பவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். முத்துக்குமரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்படும். கடந்த, 4ம் தேதி கணவருடன் சங்கீதா தகராறு செய்தார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த சங்கீதா உடலில் தீப்பற்றி, படுகாயம் அடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சங்கீதா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இந்நிலையில், சங்கீதா இறப்பதற்கு முன் அளித்த மரண வாக்குமூலம் வீடியோவில், 'வரதட்சணை கேட்டு கணவர் அடிக்கடி, 'டார்ச்சர்' செய்தார். குடித்துவிட்டு வந்து என்னை அடிப்பார்.

'மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பேன்' என கூறினேன். கணவர் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு, தண்ணீரில் துாக்கி வீசினார்.'தோல் கழன்று கதறினேன். அக்கம் பக்கத்தினர் மீட்டனர். ஆம்புலன்ஸ் வந்தது. அவர் என்னுடன் வரமாட்டேன் என, கூறிவிட்டார். எல்லாரும் திட்டிய பின் என்னுடன் வந்தார். வரும்போது என்னை மிரட்டினார்.

'நீ உண்மையை சொன்னால், உன்னை கொளுத்திய மாதிரியே பிள்ளைகளையும் கொளுத்தி விடுவேன்' என, மிரட்டினார். அதனால் யாரிடமும் உண்மையை சொல்லவில்லை. 'நீதிபதி, போலீசார், டாக்டர் மற்றும் எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் பொய் தான் சொன்னேன். இது தான் நடந்த உண்மை' என, சங்கீதா கூறியுள்ளார். தொடர்ந்து, சங்கீதாவின் தந்தை சக்திவேல் புகாரின்படி, கண்டமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தந்தையை எரித்து கொன்ற மகன் கைது


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ், 63. இவரது மகன் குருமூர்த்தி, 32. பாக்கியராஜ் வசிக்கும் வதுவார்பட்டிக்கு பக்கத்து ஊரான வாழ்வாங்கியில், குருமூர்த்தி வசிக்கிறார். மகனுக்கு புதிதாக டிராக்டர் வாங்கி கொடுத்து பராமரிக்குமாறு பாக்யராஜ் கூறி உள்ளார். இதன் வாயிலாக தினமும் கிடைக்கும் வருவாயில், 1,000 ரூபாய் தருமாறு மகனிடம் கேட்டுள்ளார்.

ஒரு வாரமாக குருமூர்த்தி, பாக்கியராஜுக்கு பணம் தரவில்லை. இது குறித்து பாக்கியராஜ் நவ., 25ல், மொபைல் போனில் கேட்ட போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று இரவு பாக்கியராஜ் வீட்டிற்கு சென்று, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு குருமூர்த்தி ஓடி விட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்கியராஜ், நேற்று இறந்தார். பந்தல்குடி போலீசார் குருமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கோவையில் போதைப் பொருள் பறிமுதல்; அசாம் தொழிலாளர் இருவர் கைது


தொண்டாமுத்துார் : கோவையில் போதைப்பொருள் வைத்திருந்த அசாம் மாநிலத் தொழிலாளர் இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை, தொண்டாமுத்துார் அடுத்த முத்திபாளையத்தில், போதைப் பொருள் விற்பனை நடப்பதாக, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் அமுதா, எஸ்.ஐ., ராமேஷ்கண்ணா அடங்கிய சிறப்பு படையினர் சோதனை நடத்தினர். அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரிடம் சோதனை செய்ததில், புதிய வகை போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்ருல் இஸ்லாம், 22, அப்துல் முத்தலிப், 37, ஆகிய இருவரும் முத்திபாளையத்தில் தங்கி, பாக்கு உரிக்கும் தொழில் செய்து வந்தனர். அசாம் மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களை, கோவை கொண்டு வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து நேற்று சிறையில் அடைத்தனர். எட்டு சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'இருவரும், அடிக்கடி அசாம் மாநிலம் சென்று வந்துள்ளனர். அங்கிருந்து, ஆரஞ்சு நிற போதை பவுடரை எடுத்து வந்து, ஒரு டப்பாவில் அடைத்து, 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். 'புது ரக போதைப்பொருள் என்பதால் பெயர் தெரியவில்லை. மூலக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்ப உள்ளோம்' என்றனர்.

ஆன்லைன் ரம்மியில் இழப்பு; ஒடிசா பெண் தற்கொலை


திருநெல்வேலி : ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார். இவரது மனைவி பந்தனா மாஜி. இவர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்தனர். அப்பகுதி வேலாயுதபுரத்தில் தங்கியிருந்தனர். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இருவரும் மில்லில் வேலை பார்த்தாலும் மற்ற நேரங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டினர்.

பந்தனா மாஜி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ 70 ஆயிரம் இழந்துள்ளார். மனமுடைந்தவர் கணவர் மில் வேலைக்கு சென்ற நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்தனர். ஒடிசாவில் உள்ள பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 3 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாமனாரை கொன்ற மருமகன் கைது


ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த, மேல்விஷாரம் மலையடிவாரம், அம்சாத் நகரைச் சேர்ந்தவர் இஸ்மாயில், 45; வேலுாரில் ஹோட்டல் பிரியாணி மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இஸ்மாயிலின் முதல் மகளின் கணவர் ரகமதுல்லா, 30, டிரைவர். அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர்களுக்குள் குடும்ப தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மருமகன் ரகமதுல்லாவை அழைத்து பேசியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த ரகமதுல்லா தாக்கியதில், இஸ்மாயில் உயிரிழந்தார். ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிந்து ரகமதுல்லாவை கைது செய்தனர்.

தேசிய நிகழ்வுகள்:


வாய்ப்பாடு சொல்லாத மாணவனின் கையில் துளை போட்ட ஆசிரியர்


கான்பூர் : உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றுபவர், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இரண்டாவது வாய்ப்பாடு ஒப்பிக்கும்படி கூறியுள்ளார். ஒரு மாணவனுக்கு வாய்ப்பாடு சரியாக சொல்லத் தெரியவில்லை. ஆத்திரம் அடைந்த ஆசிரியர், பள்ளியில் இருந்த டிரில்லிங் மிஷினை எடுத்து, மாணவனின் கையை நீட்டும்படி கூறி துளையிட்டுள்ளார்.

அருகில் நின்ற மற்றொரு மாணவன், உடனடியாக டிரில்லிங் மிஷின் ஒயரை பிடுங்கியதால், சிறிய காயத்துடன் மாணவன் தப்பினான். இது குறித்து தகவல்அறிந்த பெற்றோர், மாணவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறிய சிகிச்சைக்கு பின், மாணவன் வீடு திரும்பினான்.

இந்த சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர், மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணைக்கும் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் ஆசிரியரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ரூ.50 கோடி 'ஹெராயின்' பறிமுதல்


மும்பை : மும்பை விமான நிலையத்தில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து வரும் விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணியரிடம் போதைப் பொருள் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஆண், பெண் பயணியர் இருவரை சோதனையிட்டனர்.

அவர்களது சூட்கேசில் மறைத்து வைத்திருந்த 7.9 கிலோ ஹெராயின் பாக்கெட்டுக்களை கண்டுபிடித்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 50 கோடி ரூபாய்எனவும், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கணவரை கொலை செய்து கழிப்பறையில் புதைத்த மனைவி

சங்ரூர்: பஞ்சாபில் , சங்ரூர் மாவட்டத்தில் பக்சிவாலா கிராமத்தில் வசித்து வருபவர் ஜஸ்வீர் கவுர். இவர், தன் கணவர் காலாசிங் காணாமல் போய் விட்டதாக ஒரு மாதத்திற்கு முன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். ஜஸ்வீர் கவுரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தனர். இதில், ஜஸ்வீர் கவுர், கணவர் காலாசிங்கை கொலை செய்து வீட்டில் உள்ள கழிப்பறை தொட்டியில் புதைத்தது தெரியவந்தது. இதற்காக 30 அடி ஆழத்திற்குக் குழி தோண்டப்பட்டு உள்ளது. அதில், கணவரின் உடலை புதைத்த கவுர், பின் மண்ணைப் போட்டு மூடியுள்ளார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: காலாசிங்கை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஜஸ்வீர் கவுர் மீது சந்தேகம் வந்ததால், அவரிடம் விசாரித்தோம். அவர், முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தார். விசாரணையை தீவிரப் படுத்தியதும், குற்றத்தை ஒப்புக்கொண்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதால், அவரை கொலை செய்து, கழிப்பறை தொட்டியில் புதைத்ததாக தெரிவித்தார். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.5 கோடி தங்கம் கொள்ளை

போபால்: மத்திய பிரதேசத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி, வங்கியில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை ஆறு பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள கட்னி மாவட்டத்தில், தங்க நகை கடன் வழங்கும் வங்கி உள்ளது. நேற்று இங்கு புகுந்த ஆறு பேர் அடங்கிய கொள்ளை கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டி, 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 3.5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றது. தகவல் அறிந்த போலீசார், வங்கியிலுள்ள கண்காணிப்பு கேமராவை சோதித்தனர். அதில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் பேசியதாவது: கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பீஹாரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் மீது பீஹாரிலும் பல வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உலக நிகழ்வுகள்:

கனடாவில் விபத்து: இந்திய மாணவர் பலி

டொரன்டோ: வட அமெரிக்க நாடான கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள கல்லுாரியில், நம் நாட்டின் ஹரியானாவைச் சேர்ந்த கார்த்திக் சைனி, 20, என்ற மாணவர் படித்து வந்தார். சமீபத்தில் கல்லுாரிக்கு சைக்கிளில் சென்ற அவர், சாலையைக் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த டிரக் அவர் மீது மோதியது.

சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக டொரன்டோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டமங்கலம்: காதல் கணவன் தன்னை தீ வைத்து கொளுத்தியதாக, மனைவி அளித்த மரண வாக்குமூலம், சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள

மூலக்கதை