தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்! சிலருக்கு யோகம்.. மீதி பேருக்கு சோகம்

தினமலர்  தினமலர்
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்! சிலருக்கு யோகம்.. மீதி பேருக்கு சோகம்

தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். இளைஞர் அணி செயலர் உதயநிதி உட்பட, புதிதாக சிலருக்கு அமைச்சர் பதவியும், சில அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகா என்ற யோகமும் அடிக்க உள்ளது. துறை ரீதியாக சரிவர செயல்படாத அமைச்சர்கள் சிலருக்கு பதவி இறக்கமும், இலாகா பறிப்பு என்ற சோகமும் அரங்கேற உள்ளதாக, ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்து, 18 மாதங்களாகின்றன. இந்தக் காலகட்டத்தில், 33 அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் தயாரித்துள்ளார். அந்த அறிக்கையில், யார் யார் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்; யார் யார் மந்தமாக உள்ளனர் என்ற விபரம் இடம் பெற்றுஉள்ளது.

அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, சமீபத்தில் கவர்னரிடம், அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து புகார் அளித்தார்.

ஆலோசனை


அந்த புகார்கள் மீதான உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய, ரகசிய குழுவை முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார்.

அத்துடன், தமிழக அரசின் முக்கிய உயர் அதிகாரிகள் மற்றும் தன் நம்பிக்கைக்கு உரிய நெருக்கமான உறவுகளுடனும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

அப்போது, ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள், நிர்வாக திறமை இல்லாத அமைச்சர்கள், கட்சியில் கோஷ்டி மோதலை ஊக்கப்படுத்தும் அமைச்சர்களை மாற்றுவது குறித்து ஆலோசித்துள்ளார்.

டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாத முற்பகுதியில், சரிவர செயல்படாத அமைச்சர்களின் பதவியை பறித்து விட்டு அல்லது அவர்களை முக்கியத்துவம் இல்லாத இலாகாக்களுக்கு மாற்றி விட்டு, வேகமாக செயல்படக் கூடிய புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட உள்ள அமைச்சர்களில், பெண்களும் இடம் பெற உள்ளனர்.

அத்துடன், முதல்வரின் மகன் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவதும் உறுதியாகி உள்ளது. 'துணை முதல்வர் பதவி வழங்கினாலும் ஆச்சரியமல்லை' என்கின்றனர், கட்சி நிர்வாகிகள் சிலர்.

இது குறித்து, ஆளுங்கட்சி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

அடுத்தாண்டு ஜனவரியில், சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது. உதயநிதி ஜாதகப்படி, அவருக்கு அரசு பதவி யோகம் அடிக்க உள்ளதால், கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, கட்சியினருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, நேற்று உதயநிதியின் பிறந்த நாளை, கட்சியினர் மிக விமரிசையாக கொண்டாடினர்.

ராஜினாமா


சமீபத்தில், சென்னையில் நடந்த டி.கே.சீனிவாசன் நுாற்றாண்டு நிறைவு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'இளைஞரணி சார்பில், 234 தெகுதிகளில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

'இது தொடர வேண்டும் என்பது வேண்டுகோள் அல்ல; உத்தரவு' என்றார். இதன் வாயிலாக, உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைப்பது உறுதியாகி உள்ளது.

இதற்கிடையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சரிவர செயல்படவில்லை என்ற புகாரை, நிதி அமைச்சர் தியாகராஜன் கூறியுள்ளார். அதிருப்தி அடைந்த பெரியசாமி, தனக்கு நெருக்கமான கட்சியினரிடம், 'நான் ராஜினாமா செய்து விடலாமா என்று நினைக்கிறேன்' என புலம்பியுள்ளார்.

எனவே, நிதி அமைச்சர் இலாகாவை, தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மாற்றி கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பால்வளத் துறை அமைச்சர் நாசர், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தனிடம் உள்ள இலாகாக்களும் மாற்றி அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன், தென் மாவட்ட அமைச்சர் ஒருவரிடம் உள்ள இலாகா பறிக்கப்பட்டு, அவரது சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு அமைச்சருக்கு வழங்கப்பட உள்ளது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சரிடம் உள்ள 'பவர்புல்' இலாகா ஒன்றும் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது விமர்சனம் ஆகிவிடக் கூடாது என்பதால், பெண்களுக்கு முக்கியத்துவம் தரவும், இளைஞர்களான புதுமுகங்கள் சிலருக்கும் அமைச்சர் பதவி தரவும் முடிவாகி உள்ளது. இவ்வாறு ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- புதுடில்லி நிருபர் -

தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். இளைஞர் அணி செயலர் உதயநிதி உட்பட, புதிதாக சிலருக்கு அமைச்சர் பதவியும், சில அமைச்சர்களுக்கு கூடுதல்

மூலக்கதை