ரயில்களில் சலுகை ரத்து செய்யப்பட்டதால் மூத்த குடிமக்கள் பயணம் 24% சரிவு

தினகரன்  தினகரன்
ரயில்களில் சலுகை ரத்து செய்யப்பட்டதால் மூத்த குடிமக்கள் பயணம் 24% சரிவு

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பு, மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது.  ஆனால், கொரோனா காலத்துக்குப் பிறகு, அவர்களுக்கு இருந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனா காலகட்டத்தில் முதியோர்களுக்கான ரயில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மக்களவையில் எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாகப் அளித்த பதிலில், ‘ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டால் அது ரயில்வே துறையைக் கடுமையாகப் பாதிக்கும். ஆகவே, மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து தரப்பு பயணிகளுக்குக் கட்டணச் சலுகையை நீட்டிப்பது இயலாத காரியமாகும்’ என்று  குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு ரயில்வே அளித்த பதிலில், ‘கடந்த 2018-19ம் ஆண்டில் மூத்த குடிமக்கள் 7.1 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்தனர். 2019-20ல் இது 7.2 கோடியாக உயர்ந்தது. கொரானா காலமான 2020-21ல்  1.9 கோடி பேர் பயணித்தனர். 2021-22ல் 5.5 கோடி பேர் பயணம் செய்தனர். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து காரணமாக பயணிகள் எண்ணிக்கை 24 சதவீதம் குறைந்து விட்டது. அதே போல் ரயில்வேயின்  வருவாயும் குறைந்துள்ளது. கடந்த 2018-19ல் மூத்த குடிமக்கள் மூலம் ரூ. 2920 கோடி கிடைத்தது. 2019-20ல் ரூ.3010, 2020-21ல் ரூ. 875, 2021-22ல் ரூ.2,598 கோடி கிடைத்தது என்று தெரியவந்துள்ளது.  கொரோனா காலத்தில் குறைவான பயணிகளே ரயிலில் பயணித்தனர். அதே போல் மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து செய்யப்பட்டதும் இதற்கான காரணம்’ என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை