நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி; நேபாள பிரதமராக தேவ்பாவுக்கு வாய்ப்பு

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி; நேபாள பிரதமராக தேவ்பாவுக்கு வாய்ப்பு

காத்மாண்டு: நேபாள  நாடாளுமன்ற தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஷெர் பகதுார் தேவ்பா மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 20ம் தேதி நாடாளுமன்ற  தேர்தல் நடந்தது.  தேர்தலில் பதிவான  வாக்குகள் எண்ணப்பட்டன. இதில்,   நேபாள காங்கிரஸ் 53 இடங்களிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(யுஎம்எல்) கட்சி 42 , கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் 17, சிபிஎன்(ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சி 10  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. புதிய கட்சிகள் ராஷ்டிரிய சுதந்திரா கட்சி,ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சிகள் தலா 7 இடங்களை வென்றுள்ளன.  சுயேச்சைகள், இதர சிறிய கட்சிகள் 21 இடங்களை பிடித்துள்ளன. நேரடி தேர்தல் நடந்த 21 இடங்களுக்கு இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.  நேபாள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 85 இடங்களை கைப்பற்றி உள்ளது. எதிர்க்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட்(யுஎம்எல்) கூட்டணி 55 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.  நேபாள காங்கிரஸ் தலைவரும் பிரதமருமான ஷெர் பகதுார் தேவ்பா மற்றும் மூன்று முன்னாள் பிரதமர்களான புஷ்பகமல் பிரச்சந்தா,மாதவ் நேபாள், கே.பி.சர்மா ஒலி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பிரதமர் தேவ்பா, முன்னாள் பிரதமர் பிரச்சந்தா உட்பட கூட்டணியில் உள்ள 5 கட்சிகளின் தலைவர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு அந்த கட்சிகள் சம்மதம் தெரிவித்தன. இதனால் தேவ்பா பிரதமர் பதவியை தக்க வைத்து கொள்வார் என கூறப்படுகிறது.

மூலக்கதை