பிளேக் கோவர்ஸ் ஹாட்ரிக் 2வது ஹாக்கி டெஸ்டில் ஆஸி. அபார வெற்றி

தினகரன்  தினகரன்
பிளேக் கோவர்ஸ் ஹாட்ரிக் 2வது ஹாக்கி டெஸ்டில் ஆஸி. அபார வெற்றி

அடிலெய்டு: இந்திய அணியுடனான 2வது ஹாக்கி டெஸ்ட் போட்டியில், பிளேக் கோவர்சின் ஹாட்ரிக் அசத்தலால் ஆஸ்திரேலியா 7-4 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், துரதிர்ஷ்டவசமாக கடைசி நிமிடத்தில் கோல் விட்டுக்கொடுத்த இந்தியா 4-5 என்ற கணக்கில் போராடி தோற்றது. ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நேற்று நடைபெற்றது.மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், 3வது நிமிடத்திலேயே இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து ஆஸி. தரப்புக்கு அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து, பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஆஸி. அணியின் பிளேக் கோவர்ஸ், ஜாக் வெல்ச் அடுத்தடுத்து கோல் அடித்து பதிலடி கொடுத்தனர். 3வது 15 நிமிட நேர ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-4 என பின்தங்கியிருந்தது.கடைசி கால் மணி நேர ஆட்டத்தில் துடிப்புடன் விளையாடி முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, கோவர்சின் ஹாட்ரிக் அசத்தலால் 7-4 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய தரப்பில் ஹர்மன்பிரீத் 2 கோல் (3வது, 60வது நிமிடம்), ஹர்திக் சிங் (25’), முகமது ரஹீல் (36வது நிமிடம்) தலா ஒரு கோல் போட்டனர்.ஆஸ்திரேலியா சார்பில் கோவர்ஸ் 3 கோல் (12வது, 27வது, 53வது நிமிடம்), வெல்ச் 2 கோல் (17வது, 24வது நிமிடம்), ஜேக் வெட்டன் (49’), ஜேக்கப் ஆண்டர்சன் (48’) தலா 1 கோல் அடித்தனர். நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் நாளை மறுநாள் நடக்கிறது.

மூலக்கதை