சீன அதிபருக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு;‘ஜின்பிங் பதவி விலகு’கொரோனா கட்டுப்பாடுகளால் அதிருப்தி

தினகரன்  தினகரன்
சீன அதிபருக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு;‘ஜின்பிங் பதவி விலகு’கொரோனா கட்டுப்பாடுகளால் அதிருப்தி

பீஜிங்: கொரோனா கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக்கோரி சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சீனாவின் வாழ்நாள் அதிபராக உள்ள ஜி ஜின்பிங், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனது கைப்பிடியில் வைத்துள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர எந்த எதிர்க்கட்சியும் அந்நாட்டில் இல்லை. இதனால் எந்த எதிர்ப்பும் இல்லாததால், கொரோனா விஷயத்தில் ஜின்பிங் அரசு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சீன மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று திடீரென அதிகரித்த நிலையில், சில மாகாணங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, உரும்கி நகரில் ஊரடங்கு கட்டுப்பாட்டால், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை விரைவில் அணைக்க முடியாமல் 10 பேர் பலியாகினர்.இந்த விவகாரத்தால் உரும்கியில் தொடங்கிய மக்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவி உள்ளது. பீஜிங், ஷாங்காய், உரும்கி, நான்ஜிங், குவாங்ஜோ உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் ஜின்பிங் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை முழங்கி உள்ளனர். ‘ஜின்பிங் பதவி விலகு’, ‘கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறு’ என கோஷமிட்டுள்ளனர். அதிபருக்கு எதிராக இத்தகைய எதிர்ப்பு கோஷங்கள் இதுவரை சீனாவில் ஒலித்ததில்லை.  ஆனால் தற்போது கொரோனா விவகாரம் சீன மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை