சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

தினகரன்  தினகரன்
சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் 6 மணிநேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நடை திறந்த 16ம் தேதி மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.  ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றும் சபரிமலையில் பக்தர்கள் மிக அதிக அளவில் குவிந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த போது பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அதிகாலை 3 மணிக்கு முன் சபரிமலை வந்த பக்தர்களால் காலை 9 மணிக்குப் பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது.     நேற்று 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  முன்பதிவு செய்திருந்தனர். இதில் நேற்று மாலை வரை 55 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று (28ம்தேதி) 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். வெகு தொலைவிலிருந்து சபரிமலை வரும் பக்தர்கள் பெரும்பாலும் பஸ், வேன் மற்றும் கார்களில் தான் வருகின்றனர். ஆனாலும் சிலர் லாரிகள், டெம்போ உள்ளிட்ட சரக்கு வாகனங்களிலும் சபரிமலைக்கு வருவது உண்டு. இவ்வாறு வரும் சரக்கு வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள் சரக்கு வாகனங்களில் சபரிமலை செல்ல கேரள மோட்டார் வாகனத்துறை தடை விதித்துள்ளது. மீறி வரும் வாகனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல்  சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா தவிர பிற மாவட்டங்களில் இயக்கப்படும் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களிலும் சபரிமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை