மெக்சிகோவை வீழ்த்தி அர்ஜென்டினா முதல் வெற்றி: 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தல்

தினகரன்  தினகரன்
மெக்சிகோவை வீழ்த்தி அர்ஜென்டினா முதல் வெற்றி: 20 என்ற கோல் கணக்கில் அசத்தல்

தோகா:  32 அணிகள் பங்கேற்றுள்ள 22வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு 12.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடந்த போட்டியில் சி பிரிவில் அர்ஜென்டினா-மெக்சிகோ அணிகள் மோதின. சவுதி அரேபியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த அர்ஜென்டினா கட்டாய வெற்றி நெருக்கடியில் களம் இறங்கியது. அதேபோல் மெக்சிகோ போலந்து அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் டிரா செய்திருந்தது. இதனால் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் களம் இறங்கியதால் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே, மெக்சிகோ ஆக்ரோஷமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிக ஃபவுல்கள் செய்தது.இருப்பினும் அர்ஜென்டினா தரப்பில் பெரிதாக அட்டாக் செய்யப்படவில்லை. முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் மட்டுமே இரு அணிகளும் அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடியது. ஆனால் முதல் பாதி ஆட்டம் கோல் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அர்ஜென்டினா அட்டாக் மேல் அட்டாக் செய்தது. வலது பக்கம், இடது பக்கம் என மாறி மாறி தொடர்ந்து அட்டாக் செய்தனர்.இதன் பலனாக 64வது நிமிடத்தில் டீ மரியா சரியாக கணித்து கடத்திய பாஸை, கேப்டன் மெஸ்ஸி தனது ஸ்டைலில் முதல் கோல் அடித்து அசத்தினார். இதன்பின்னர் மைதானமே ஒட்டுமொத்தமாக மெஸ்ஸி, மெஸ்ஸி என்று ஆர்ப்பரித்தது. இதனைத் தொடர்ந்து மெக்சிகோ வேறு வழியின்றி அட்டாக் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். 84வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்தனர். தொடர்ந்து எதிர்பாராத நேரத்தில் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஷார்ட் கார்னரில் இருந்து ஃபெர்னான்டெஸ் அர்ஜென்டினா அணிக்காக 2வது கோலை அடித்து அசத்தினார். பின்னர் இரண்டாம் பாதியில் 6 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் கோல்கள் எதுவும் அடிக்கப்படாத நிலையில், அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்று வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. இதனிடையே போட்டியின் போது இரு நாட்டு ரசிகர்கள் கேலரியில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதே பிரிவில் முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில் போலந்து 2-0 என கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது. இந்த பிரிவில் அர்ஜென்டினா தனது கடைசி லீக் போட்டியில் வரும் 1ம்தேதி போலந்தையும், சவுதி அரேபியா மெக்சிகோவையும் எதிர்கொள்கிறது. இதன் முடிவை பொறுத்து 2 அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெறும்.இன்றைய போட்டிகள்உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 போட்டிகள் நடக்கிறது.* மாலை 3.30 மணிக்கு இ பிரிவில் ஜப்பான்-கோஸ்டாரிக்கா மோதுகின்றன.* மாலை 6.30 மணிக்கு எப் பிரிவில் பெல்ஜியம்-மொராக்கோவுடன் மோதுகிறது.* இரவு 9.30 மணிக்கு எப் பிரிவில் குரோஷியா, கனடாவை எதிர்கொள்கிறது.* நள்ளிரவு 12.30 மணிக்கு இ பிரிவில் பலன் வாய்ந்த ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மூலக்கதை